உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத அங்கன்வாடி மையம் மதுரை மாநகராட்சி வார்டு 27ல் அவலம்

குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத அங்கன்வாடி மையம் மதுரை மாநகராட்சி வார்டு 27ல் அவலம்

மதுரை : மதுரை மாநகராட்சி வார்டு 27க்குட்பட்ட அஹிம்சாபுரம் பகுதியில் குப்பை, சேதமடைந்த அங்கன்வாடி, சுகாதார நிலைய கட்டடங்கள் போன்ற பிரச்னைகளால் பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில், பாண்டியன் தெரு, 50 அடி, 60 அடி ரோடுகள், போஸ் வீதியின் ஒரு பகுதி, ஜீவா ரோடு, அஹிம்சாபுரம் 8 தெருக்கள் உள்ளிட்ட 34 தெருக்களில் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. குப்பை அள்ளுவதில்லை இப்பகுதி வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை ஜீவா ரோடு பாலம் அருகே 8 குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுகின்றன. அவற்றை தனியார் ஒப்பந்ததாரர்கள் முறையாக அப்புறப்படுத்துவதில்லை. மூன்று சக்கர வண்டியில் சில தெருக்களில் சேகரிக்கும் குப்பையை தொட்டியில் கொட்ட முடியாமல் துாய்மை பணியாளர்கள் அங்கேயே நிறுத்திச் செல்கின்றனர். அப்பகுதி பால்ராஜ் கூறுகையில், ''குப்பை நிரம்பி வழிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. மாட்டு இறைச்சிக் கழிவுகளை இரவில்கொட்டுவதால்,வீடுகளில் குடியிருக்க முடியவில்லை. மழை பெய்தால் தெருவே சீரழிந்து போகிறது. ஊழியர், 3 சக்கர வண்டி பற்றாக்குறை அதிகம் உள்ளதால் வாரத்தில் 3 நாள் மட்டுமே குப்பை சேகரிக்கப்படுகிறது'' என்றார். அங்கன்வாடி கட்டடம் சேதம் கட்டபொம்மன் நகர் அங்கன்வாடியில் மொத்தம் 104 குழந்தைகள் படிக்கின்றனர். கட்டடங்களின் தரைத்தளம் உடைந்தும், சமையலறை கூரை பெயர்ந்தும் விழுகின்றன. சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் கசிவதால் மின்கசிவும் உள்ளது. சுவரைத் தொட்டால் 'ஷாக்' அடிக்கிறது. கழிப்பறை போதிய பராமரிப்பின்றி உள்ளது. அதிகாரிகள், மேயர் 2 ஆண்டுகளுக்கு முன் பார்வையிட்டும் நடவடிக்கை இல்லை. அதே பகுதியில் செயல்படும் சுகாதார மையம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தான் துவங்கப்பட்டது. ஆனால் மையத்திற்கு செல்லும் படிக்கட்டு, மருந்து வழங்கும் அறை, டாக்டர், நோயாளிகள் அறைகள் என அனைத்து அறைகளிலும் தளம் இறங்கி, பெயர்ந்துள்ளது. தெருநாய்கள் தொல்லை அப்பகுதி மனோகரன் கூறுகையில், ''தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. டூவீலரில் செல்வோரை துரத்திச் சென்று கடிக்கிறது. குழந்தைகள் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். பாண்டியன் தெருவில் போதிய கம்பங்கள் இல்லாததால் மின் ஒயர்கள் தொங்குகின்றன. கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மந்த கதியில் நடக்கிறது'' என்றார். அ.தி.மு.க., கவுன்சிலர் மாயத்தேவன்: வார்டின் அனைத்து தெருக்களிலும் ரூ.10 லட்சம் மதிப்பில் 62 சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் மண்டலத் தலைவர்கள் இல்லாததால் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதனால் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. கவுன்சிலர் நிதி முடங்கியுள்ளதால் வார்டு பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்படுகிறது. அப்பதவிகளை உடனே நிரப்ப வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை