முதல்வர் கோப்பைக்கான போட்டி ஆக.16க்குள் விண்ணப்பிக்கலாம்
மதுரை: பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான முதல்வர் கோப்பைக்கான 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் ஆக. 22 முதல் செப். 19 வரை நடக்கின்றன.மாவட்ட அளவில் 25 வகை, மண்டல அளவில் 7, மாநில அளவில் 37 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு ரூ.83.37 கோடி மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. 19 வயதுக்குட்பட்ட பள்ளி, 25 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தடகளம், இறகுபந்து, கூடைபந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பாட்டம், நீச்சல், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஹேண்ட்பால், கேரம், செஸ் போட்டிகளும் பள்ளிக்கு கோகோ, கல்லுாரிக்கு பூப்பந்து போட்டிகள் நடக்கின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம், இறகுபந்து, வீல்சேர் டேபிள்டென்னிஸ், வாலிபால், எறிபந்து, கபடி போட்டி நடக்கிறது. வயது வரம்பில்லை.15 முதல் 35 வயதுக்குட்பட்ட பொதுப்பிரிவினருக்கு மாவட்ட அளவில் தடகளம், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம், சிலம்ப போட்டிகள், மாநில அளவில் இறகுபந்து, கபடி போட்டி நடக்கிறது. அரசு ஊழியர்களுக்கு மாவட்ட தடகள, செஸ், கபடி, வாலிபால் போட்டி, மாநில அளவில் இறகுபந்து, கேரம் போட்டி நடக்கிறது. வயது வரம்பில்லை.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தடகளம், நீச்சல் போட்டிகளில் ஏதேனும் இரண்டு பிரிவுகளில் பங்கேற்கலாம். முதல்பரிசு ரூ.ஒரு லட்சம், 2ம் பரிசு ரூ.75 ஆயிரம், 3ம் பரிசு ரூ.50ஆயிரம் வழங்கப்படும். cmtrophy.sdat.in/ sdat.tngov.inஇணையதளத்தில் புகைப்படம், ஆதார்கார்டுடன் ஆக. 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.