மேலும் செய்திகள்
தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்படுத்துவது எப்படி?
20-Mar-2025
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் கொட்டாம்பட்டி கொடுக்கம்பட்டி கிராமத்தில் நடந்தது.தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா கூறுகையில், ''கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லுார் வட்டாரங்களில் 10 ஆயிரத்து 200 எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடியாகிறது. கொடுக்கம்பட்டி கிராமத்தில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் நோயை கட்டுப்படுத்துவது குறித்து 40 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது'' என்றார்.பூச்சியியல் துறைத்தலைவர் சந்திரமணி கூறியதாவது: இளங்குஞ்சுகள், முதிர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் ஓலையின் அடிப்பாகத்தில் இருந்து இலைச்சாற்றை உறிஞ்சுவதால் கருப்பு நிறமாகி ஒளிச்சேர்க்கை தடைபடுகிறது. பாதித்த பகுதிகளில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிக்க வேண்டும். என்கார்சியா ஒட்டுண்ணி குழவிகள் உள்ள தென்னை ஓலைகளை ஏக்கருக்கு 10 இலைத்துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது இணைத்து ஈக்களை கட்டுப்படுத்தவேண்டும். இவை தென்னை ஆழியார் நகர் ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கும். கிரைசோபிட் அல்லது அப்பா்டோக்கிரைசா அஸ்டா் என்ற இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது இணைத்து கட்டுப்படுத்தலாம் என்றார். உதவி இயக்குநர்கள் ஸ்ரீமீனா, ரிஸ்வானா பர்வீன், பேராசிரியர் ஸ்ரீனிவாசன், இணைப் பேராசிரியை உஷா கலந்து கொண்டனர்.
20-Mar-2025