சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவியர் கைப்பந்து போட்டி
திருப்பரங்குன்றம் : மாநில அளவிலான சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவியருக்கான கைப்பந்து போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மதுரை ஓம் சாதனா மத்திய பள்ளி அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர். ஓம் சாதனா மத்திய பள்ளியில் நான்கு நாட்கள் நாக் அவுட் முறையில் நடந்த இப்போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 32 பள்ளிகளில் இருந்து 70 அணியினர் பங்கேற்கின்றனர். 14, 17 , 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் அவர்கள் விளையாடினர். நேற்று இறுதிப் போட்டிகளை பள்ளித் தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன் துவக்கி வைத்தனர். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஓம்சாதனா மத்திய பள்ளி 8-3 என்ற கோல் வித்தியாசத்தில் சென்னை கவிபாரதி பள்ளி அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் சென்னை மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளி அணி 13-7 என்ற கோல் வித்தியாசத்தில் மதுரை டால்பின் பள்ளி அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. மதுரை ஓம் சாதனா மத்திய பள்ளி அணியினர் 3 ம் இடம் பெற்றனர். 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் சென்னை ஜி.கே ஷெட்டி பள்ளி அணி 7-2 என்ற கோல் வித்தியாசத்தில் சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளி அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கைப்பந்து விளையாட்டு பயிற்சியாளர்கள் குமரேசன், ராதாகிருஷ்ணன், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் விளையாட்டு ஆணைய பார்வையாளர் வேல்முருகன், தொழில்நுட்ப நிர்வாகிகள் சக்திவேல், நெப்போலியன், ஓம் சாதனா மத்திய பள்ளி இயக்குனர் நடன குருநாதன், முதல்வர் பரமகல்யாணி பரிசுகள் வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர்கள் முருகேஸ்வரி, கார்த்திக், பரமாத்மா கலந்து கொண்டனர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணியினர் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.