மழையால் ஓடைகளில் நீர்வரத்து மாதரை கண்மாய்கரை உடைப்பு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் தொடர் மழையால் ஓடைகளில் நீர் வரத்து துவங்கி, கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. மாதரை கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு 58 கிராம கால்வாயில் தண்ணீர் செல்கிறது.உசிலம்பட்டியின் மேற்கு பகுதியில் கிடைத்த தொடர் மழையால் 15 ஆண்டுகளுக்குப்பின் அசுவமாநதி தடுப்பணை நிரம்பி மறுகால் செல்கிறது. தொடர்ந்து ஓடைகளில் நீர் வரத்து உள்ளதால் கருக்கட்டான்பட்டி, மாதரை, நல்லுத்தேவன்பட்டி, உசிலம்பட்டி, கீரிபட்டி, உ.புதுக்கோட்டை கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கருக்கட்டான்பட்டி கண்மாய் நிரம்பி மறுகாலில் பாயும் நீர் உசிலம்பட்டி கண்மாய்க்கு வருகிறது.மாதரை கண்மாய் மேற்கு கரையையொட்டி 58 கிராம கால்வாய் செல்கிறது. இப்பகுதி வயல்களில் தேங்கிய தண்ணீரை கால்வாய்க்குள் திருப்ப முயன்றதால் கண்மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் இணைந்து உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வயல்வெளிகளில் தேங்கும் நீரை வெளியேற்ற வேண்டிய ஓடைகள் துார்ந்து போனதால் விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கி சேதம் ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.