மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்ட கலெக்டர்
16-Mar-2025
மதுரை : டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பங்கேற்கும் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வெழுத உதவ தகுதியான உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான விருப்ப உரிமை அளிக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வேல்முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும் தேர்வுகளில் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கின்றனர். அவர்கள் தேர்வு எழுத உதவி செய்ய உதவியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். விரும்பிய, தகுதியான உதவியாளர்களை தேர்வு செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.ஆனால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும் தேர்வுகளில் வாய்ப்பளிப்பதில்லை.தேர்வு மையத்திற்கு செல்லும்போது டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் சிலரை உதவியாளர்களாக அனுப்பி வைக்கின்றனர். அவர்களுக்கு போதிய மொழி மற்றும் எழுத்தாற்றல், வாசிப்புத்திறன் இருப்பதில்லை. யு.பி.எஸ்.சி., போல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் உதவ தகுதியான, விருப்பமான உதவியாளர்களை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.பிரெய்லி கைக்கடிகாரம், கணித பலகை, எழுத்துக்களின் உருவத்தை பெரிதாக்கி பார்க்க லென்ஸ் ஆகியவற்றை பார்வைத்திறன் குறைபாடுள்ள தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு டி.என்.பி.எஸ்.சி., செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி ஏப்.3 க்கு ஒத்திவைத்தது.
16-Mar-2025