கச்சத்தீவு குறித்து முதல்வர் நீலிக்கண்ணீர் அ.தி.மு.க., மருத்துவரணி சரவணன் குற்றச்சாட்டு
மதுரை : ''தேர்தல் நெருங்கினால்தான் தி.மு.க., தலைவர்களுக்கு கச்சத்தீவு பிரச்னை ஞாபகத்துக்கு வரும். கச்சித்தீவு குறித்து தற்போது முதல்வர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் சரவணன் குற்றம்சாட்டினார். மதுரையில் அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட அரசு விழாவில் கச்சத்தீவு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில் 'தமிழக மீனவர்கள் என்றால் இளக்காரமா' என்று பேசி இருப்பது தி.மு.க., ஆட்சியில் நடந்த தவறை மறைக்கத்தான் பேசியதாக மீனவர்கள் கருதுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 800 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 6500 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 1300 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. கச்சத் தீவு குறித்து தற்போது முதல்வர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். 2008ல் ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது உச்சநீதிமன்றத்தில் கச்சத் தீவை மீட்க வழக்கு தொடுத்தார். நோட்டீஸ் விட்ட போது, மத்திய அரசு என்ன தாக்கல் செய்கிறது என பார்த்து தான் மாநில அரசு தாக்கல் செய்யும் என்று கூறியவர்தான் கருணாநிதி. இலங்கையில் இனப்படுகொலை முடிந்த பின்பு கனிமொழி, டி.ஆர்.பாலு தலைமையிலான குழு இலங்கைக்கு சென்றபோது அதிபராக இருந்த ராஜபக்சேவிடம் கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிற்கே தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களா. தேர்தல் நெருங்குவதால் தி.மு.க., தலைவர்களுக்கு கச்சத் தீவு பிரச்னை ஞாபகத்துக்கு வரும். இவ்வாறு கூறினார்.