ஐ லவ் மை சன் என மெசேஜ் அனுப்பி கோவை தம்பதி மதுரையில் தற்கொலை
மதுரை:கடன் பிரச்னையால், மதுரை மாட்டுத்தாவணி விடுதி ஒன்றில் கோவை தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இறப்பதற்கு முன், மகனுக்கு 'ஐ லவ் மை சன்' என 'மெசேஜ்' அனுப்பினர்.கோவை மாவட்டம், குரும்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 61; நெல் அறுவடை மிஷின் தொழில் செய்து வந்தார். இவரது முதல் மனைவி சாந்தி. இரு மகள்கள் உள்ள நிலையில், 2012ல் கோவை போரூர்பாளையத்தைச் சேர்ந்த கவிதாமணி, 45, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.கவிதாமணியின் முதல் கணவருக்கு பிறந்த கோகுல் என்பவரையும் பாஸ்கரன் பராமரித்து வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சைக்காக மதுரை வந்த இருவரும், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பகுதி விடுதி ஒன்றில் தங்கினர். நேற்று காலை பார்த்தபோது இருவரும் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். கவிதாமணி கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், 'பொருளாதாரத்தில் பலரையும் நம்பி கடன் கொடுத்து ஏமாந்து விட்டோம். 'இப்போது உடல்நிலையும், மனநிலையும் சரியில்லை. அதனால், இந்த முடிவுக்கு வந்து விட்டோம். எங்கள் இறப்பால், என் மகன் கோகுலை தொந்தரவு செய்ய வேண்டாம். அவனுக்கும், வரவு - செலவுக்கும் சம்பந்தமில்லை' என குறிப்பிட்டிருந்தார். இறப்பதற்கு முன் கவிதாமணி, 'ஐ லவ் மை சன்' என மகனுக்கு 'மெசேஜ்' அனுப்பி இருந்தார்.