மாநகராட்சி ஏ.இ.,க்களுடன் கமிஷனர் வயர்லெஸ் ஆய்வு; பில் கலெக்டர்கள், சுகாதார அதிகாரிகளையும் கவனிப்பாரா
மதுரை; மதுரை மாநகராட்சியில், பொறியியல் பிரிவின் உதவி பொறியாளர்களுடன் காலை, மாலை கமிஷனர் சித்ரா நடத்தும் 'வயர்லெஸ்' ஆய்வில், பில் கலெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் (சுகாதார ஆய்வாளர்கள்) உட்பட சுகாதாரத்துறை அதிகாரிகளையும் அழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து வார்டுகளிலும் காலை குடிநீர் வினியோகம், பிரச்னைகள், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நிலவரம் குறித்து தினமும் காலை 8:30 மணிக்கும், மாலை 5:00 மணிக்கும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு, உடைப்பு அடைப்பு, புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்து ஒரு மணிநேரம் 'வயர்லெஸ்' மூலம் கமிஷனர் சித்ரா ஆய்வு நடத்துகிறார்.இதில் அனைத்து வார்டுகளுக்குமான 44 ஏ.இ.,க்கள், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பொறியாளர்கள் திணறுகின்றனர். நன்றாக பணி செய்தவர்களுக்கு பாராட்டு கிடைக்கிறது. இந்த ஆய்வில் பில் கலெக்டர்களையும், குப்பை அகற்றும் பணியை மேற்பார்வையிடும் எஸ்.ஐ.,க்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளையும் இணைத்தால் ஒட்டுமொத்த மாநகராட்சி நிர்வாகமும் சுறுசுறுப்பாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஏ.இ.,க்கள் கூறியதாவது: காலை 8:30 மணிக்கு 'கன்ட்ரோல் காலிங்...' என 'வயர்லெஸ்' ஆய்வு துவங்கிவிடுகிறது. இதற்காக காலை 6:00 மணிக்கெல்லாம் அனைத்து வார்டுகளிலும் ஏ.இ.,க்கள் சென்று குடிநீர் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டியுள்ளது. இதுபோல் மாலை 5:00 மணிக்கும் தயாராக இருக்க வேண்டும். களநிலவரத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை, பாதாளச் சாக்கடை பிரச்னைகளை சரிசெய்யும் உபகரணங்கள் இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. 'வயர்லெஸ்' ஆய்வில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க முடியவில்லை.கமிஷனரின் நடவடிக்கையால் குடிநீர், பாதாளச் சாக்கடை பிரச்னை புகார் குறைந்துள்ளன. இதுபோல் வருவாயை பெருக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பில் கலெக்டர்கள், குப்பையை அகற்றும் பணியில் உள்ள எஸ்.ஐ.,க்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளையும் 'வயர்லெஸ்' ஆய்வில் இணைத்து கண்காணித்தால் பணிகள் சுறுசுறுப்பாகும் என்றனர்.