சுவாமி ஐயப்பன் குறித்து அவதுாறு பாடல்; இசைவாணி மீது தமிழகம் முழுவதும் புகார் இவ்விவகாரத்தை சும்மா விடமாட்டோம் என பா.ஜ., அறிவிப்பு
மதுரை : ''சுவாமி ஐயப்பன் குறித்து அவதுாறு பாடலை பாடி வெளியிட்ட கானா பாடகி இசைவாணி மீது தமிழகம் முழுவதும் பா.ஜ., புகார் கொடுக்கும்' என வக்கீல் பிரிவு மாநில தலைவர் வணங்காமுடி தெரிவித்தார்.நேற்றுமுன்தினம் இசைவாணி மீது பா.ஜ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் முத்துக்குமார் தலைமையில் மாநில வக்கீல் பிரிவு செயலாளர் கேசவராஜ், சிறுபான்மையினர் அணி மாநில செயலாளர் சாம்சரவணன், ஹிந்து முன்னணி மாநில துணைத் தலைவர் பரமசிவம், மாவட்ட தலைவர் சேகர், மஸ்துார் யூனியன் மாவட்ட தலைவர் அன்பழகன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தனர்.அதில், இசைவாணி என்பவர் சபரிமலை ஐயப்பனை கேவலப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ பாடல் வெளியிட்டு இருக்கிறார். 'ஐம் சாரி ஐயப்பா' என்று தொடங்கும் அந்த பாடலில் பக்தர்களை சுவாமி ஐயப்பன் அச்சுறுத்துவது போல் ஒரு கற்பனை கதையை உருவாக்கி வரிகள் அமைந்துள்ளார். பக்தர்களின் மத உணர்வுகளுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட எண்ணத்துடன் இசைவாணி செயல்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையே மதுரையில் நேற்று பா.ஜ., வக்கீல் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி கூறுகையில், ''இசைவாணி மீது பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் புகார் அளித்து வருகிறோம். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதித்துறையை நாடுவோம். இது ஒரு திட்டமிட்ட சதி. இவ்விவகாரத்தை பா.ஜ., சும்மா விடாது'' என்றார்.
பாரதிய பா.பி., புகார்
சபரிமலை ஐயப்பனை இழிவு படுத்தி பாடிய கானா பாடகி இசைவாணி, நீலம் பண்பாட்டு மைய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாரதிய பா.பி., கட்சியினர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உசிலம்பட்டி டி.எஸ்.பி., செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தனர்.அதில் கூறியிருப்பதாவது: இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக நாத்திக சக்திகளும், பிரிவினைவாதிகளும், இரண்டு மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றன. நீலம் பண்பாட்டு மைய அமைப்பின் பா. ரஞ்சித், கானா பாடகி இசைவாணி ஆகியோர் ஐயப்ப சுவாமியை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல்களை பாடி வெளியிட்டுள்ளனர்.ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் கார்த்திகை மாதத்தில் இதுபோன்ற பாடலை வெளியிட்டு ஐயப்ப பக்தர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் பிரிவினை வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் எங்கள் கட்சி மூலம் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் எனத்தெரிவித்துள்ளனர்.