மதுரை ரயில்வேயில் பார்சல் பதிவுகள் கணினிமயமாக்கம்
மதுரை : மதுரை ரயில்வே கோட்டத்தில் பார்சல்களை எளிதில் கையாளும் வகையில் அதன் பதிவுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. ரயில்களில் சிறிய பார்சல்களை அனுப்ப ஸ்டேஷன்களில் அவை பதிவு செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்கள், சரக்கு பற்றிய விபரங்கள், எடை, சேரும் இடம் குறித்த தகவல்களை படிவம் மூலம் வழங்கினால்அவற்றைக் கணக்கிட்டுகட்டணம் வசூலிக்கப்படுகிறது. பின் விபரங்கள் அடங்கிய ரசீது வழங்கப்பட்டு அதனை சேரும் இடத்தில் கொடுத்து பார்சலை பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது. இதனைஎளிதாக்கும் வகையில் பார்சல் மேலாண்மை முறை உருவாக்கப்பட்டுள்ளது. மதுரைக் கோட்டத்தில், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்செந்துார், செங்கோட்டை, ராஜபாளையம், போடி, மானாமதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், காரைக்குடி ஆகிய ஸ்டேஷன்களில் பதிவு, டெலிவரி நடவடிக்கைகள் தற்போது கணினி மயமாக்கப்பட்டுள்ளன. டிராக் செய்யும் வசதி இதன்மூலம் ஸ்டேஷனில் பார்சலின் எடை, சேரும் இடத்தின் துாரம், அதற்கேற்ப கட்டணம் ஆகியவை கணினி மூலம் கணக்கிடப்படுகிறது. பின் வழங்கப்படும் 10 இலக்க எண் கொண்டு www.parcel.indianrail.gov.inஎனும் தளத்தில் பார்சலின் நிலை குறித்து வாடிக்கையாளர்கள் அறியலாம். குறுஞ்செய்தி மூலமும்விபரங்கள் அனுப்பப்படுகிறது. பார்சல்கள் மீது அதன் விபரங்கள்அடங்கிய 'பார் கோடு லேபிள்' தயார் செய்யப்பட்டு ஒட்டப்படுகிறது. அதனை ஸ்கேன் செய்வது மூலம் எளிதாக ரயில்களில் அனுப்பவும், டெலிவரி செய்யவும் முடிகிறது.பார்சல் பதிவு செய்கையில் செல்ல வேண்டிய ஸ்டேஷனை குறிப்பிட்டவுடன், அது பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட ஸ்டேஷனா, குறிப்பிட்ட ரயில் அங்கு நிற்குமா போன்ற தகவல்களையும் கணினி தெரிவித்து விடும். இதனால் பார்சல்களை எளிதில் கையாள முடிகிறது. ''இப்புதிய நடைமுறைமூலம் மனிதத் தவறுகள், நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. எடை, கட்டணம் துல்லியமாக கணக்கிடப்படுகிறது. வீட்டில் இருந்தபடியே பார்சல்களை டிராக் செய்ய முடிகிறது.பார்சல்கள் காணாமல் போகாது'' என ரயில்வே தரப்பில் தெரிவித்தனர்.