மதுரை: மதுரை மாநகராட்சியில் 'கம்ப்ளையின்ட் செல்'லுக்கு வரும் புகார்களை சரிசெய்து, போட்டோக்களை 'ஆப்'பில் (செயலி) பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் அலைக்கழிப்புகளால் சுகாதாரம், பொறியியல் பிரிவு அலுவலர்கள் திண்டாடுகின்றனர். மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய மெயின் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் 'கம்ப்ளையின்ட் செல்' உள்ளது. இதற்கான 78716 61787 என்ற எண்ணில் டயல் செய்தும், வாட்ஸ்ஆப், ஆன்லைன் மூலமாகவும் குறைகள் குறித்து மக்கள் புகார் அளிக்கின்றனர். இந்த எண்ணுக்கு தினமும் குறைந்தது 30 புகார்கள் வருகின்றன. இதில் குடிநீர் கசிவு, வினியோக குறைபாடு, சாக்கடை அடைப்பு, தெருவிளக்கு எரியாதது, குப்பை அகற்றல், நாய்த்தொல்லை, கொசு ஒழிப்பு, சுகாதார கேடு புகார்களே அதிகம் உள்ளன. இவற்றை சம்பந்தப்பட்ட சுகாதாரம், பொறியியல் உள்ளிட்ட மாநகராட்சி பிரிவு அலுவலர்கள் நேரில் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நடந்த விவரங்களை போட்டோ எடுத்து 'ஸ்பாட்டில்' இருந்து 'ஆப்' மூலம் கமிஷனர் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஒருங்கிணைப்பு இல்லை இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பல்வேறு பணிச்சுமைக்கு இடையே பணியாற்றும் உதவி, இளநிலை பொறியாளர்கள், எஸ்.ஐ.,க்கள் இந்த நடைமுறையால் அலைக்கழிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: ஆனையூரில் உள்ள பிரச்னையை தல்லாகுளத்தில் இருந்து ஒருவர் 'கம்ப்ளையின்ட் செல்'லுக்கு புகார் செய்தால், மாநகராட்சி அலுவலர்கள் ஆனையூர் சென்று புகாரை சரிசெய்து அதற்கான போட்டோக்களை அவர்களின் அலைபேசியில் எடுத்து, தல்லாகுளம் பகுதியில் இருந்து தான் 'ஆப்'பில் பதிவேற்றம் செய்ய முடிகிறது. இது வினோதமாக உள்ளது. சுகாதாரம், பொறியியல் பிரிவுகளில் ஏற்கனவே பணியாளர் பற்றாக்குறை உள்ளது. குடிநீர், பாதாளச் சாக்கடை பணிகள், அரசு முகாம்கள் நடத்துவது, அதிகாரிகள் மீட்டிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இடையே, இப்புகார்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய ஆப்பில் பல குளறுபடி உள்ளது. கால் சென்டரில் உள்ளவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. இதுதொடர்பாக துணை கமிஷனர் சித்ரா தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் இப்பிரச்னை எழுந்தது. அதாவது புகார் ஓரிடம், புகார் செய்பவர் வேறிடம் இருந்தால் அந்த புகார்களை சரிசெய்து போட்டோக்களை பதிவேற்றம் செய்ய இயலாது. இந்நடைமுறையில் தினமும் 10 புகார்களை சரிசெய்து பதிவேற்றம் செய்யத்தான் நேரம் இருக்கிறது. வழக்கமான வார்டு சுகாதார, பணிகளை எப்போது பார்ப்பது. குறைகளை புதிதாக தீர்க்கிறேன் என்ற பெயரில் ரூ.பல லட்சத்தில் இதுபோல் நடவடிக்கை எடுப்பதற்கு பதில், தேவையான கூடுதல் பணியாளர்களை நியமிக்கலாம். புதிய தொழில்நுட்பம் வேண்டாம் எனக் கூறவில்லை. அதனை எளிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.