மதுரையில் ரேஷன் கடைகளில் லைசென்ஸ் இன்றி பட்டாசு விற்பனை
மதுரை : மதுரை மாவட்ட கூட்டுறவுத்துறைக்குட்பட்ட ரேஷன் கடைகளில் லைசென்ஸ் பெறாமல் பட்டாசுகளை விற்க கட்டாயப்படுத்துவதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் (டாக்பியா) சங்கத்தினர் தெரிவித்தனர். இம்மாவட்டத்தில் 1000 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு கடைக்கும் 20 பெட்டிகள் வழங்கப்பட்டு விற்பனை செய்ய வற்புறுத்துகின்றனர் என அச்சங்க மாநில கவுரவ பொதுச் செயலாளர் குப்புசாமி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு தீயணைப்புத்துறை உள்ளிட்ட சில துறைகளிடம் லைசென்ஸ் பெற வேண்டும். கூட்டுறவுத்துறையின் மொத்த விற்பனை பண்டகசாலை, விற்பனை சங்கங்கள் மூலம் சிவகாசியில் இருந்து 'கிப்ட் பேக்கிங்' செய்யப்பட்ட பட்டாசு பெட்டிகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றை விற்பதற்கான லைசென்ஸ் பெறவில்லை. ஒரு பெட்டி ரூ.1000 வீதம் ஒவ்வொரு கடைக்கும் 20 பெட்டிகள் அனுப்பப்படுகின்றன. 30 சதவீத கடைகளில் பட்டாசுகள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடைகளில் அரிசி, பருப்பு, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வைக்க இடமின்றி சிரமப்படுகிறோம். இந்த நிலையில் பட்டாசுகளையும் உணவுப்பொருட்களையும் வைக்கச் சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். உணவுப்பொருட்களின் மீது வெடிமருந்து வாசனை பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் நிகழ்ந்தால் ரூ.2 கோடி மதிப்புள்ள பட்டாசுகளை எங்களிடம் விற்கச் சொல்வது நியாயமில்லை. நுகர்வோர் வாங்காவிட்டால் அதற்கான தொகையை எங்களிடம் தான் வசூலிப்பர். ரேஷன் கடைக்குள் பட்டாசு பெட்டிகளை வைக்கும் போது அசாம்பாவிதம் நிகழ்ந்தால் நாங்கள் தான் பொறுப்பாக வேண்டும். அக்., 17 க்குள் கடைகளில் இருந்து பட்டாசுகளை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பட்டாசு பெட்டிகளை ஒப்படைக்க உள்ளோம் என்றார்.