| ADDED : நவ 28, 2025 08:26 AM
மதுரை: மதுரை அண்ணாநகர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதில் ஒருவர் மரணமடைந்த வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு அவகாசம் அளித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை வண்டியூர் தினேஷ் குமார். இவரை அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா உள்ளிட்ட சில போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். வண்டியூர் கால்வாய் பகுதியில் தினேஷ் உடல் மீட்கப்பட்டது. போலீசார் அடித்து கொலை செய்ததாகக்கூறி அவரது உறவினர்கள் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மரண வழக்கை போலீசார் முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. சி.பி.சி.ஐ.டி.,போலீசாரின் விசாரணைக்கு மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது பட்டியல் இன வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவில் வழக்கு பதிய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் தினேஷ்குமாரின் தாய் முத்துலட்சுமி மற்றொரு மனு செய்தார். அக்.,10ல் இரு நீதிபதிகள் அமர்வு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. நேற்று நீதிபதிகள் அனிதா சுமந்த், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. அரசு தரப்பு,'தடயவியல் ஆய்வறிக்கை, மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை தேவைப்படுகிறது. விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் தேவை,' என தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைக்கே இவ்வளவு கால அவகாசம் தேவையா,' என கேள்வி எழுப்பி இறுதி வாய்ப்பாக டிச.,11 ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.