விசாரணை கைதி மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
மதுரை:மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, வண்டியூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவரை, அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா உட்பட சில போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்து சென்ற நிலையில், வண்டியூர் கால்வா ய் பகுதியில் அவரது உடல் மீட்கப்பட்டது. போலீசார் அடித்து கொலை செய்ததாகக்கூறி உறவினர்கள் நேற்று முன்தினம் முற்றுகை, மறியல் செய்தனர். தினேஷ்குமார் மரண வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது, பட்டியலின வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவில் வழக்கு பதிய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல தினேஷ்குமாரின் தாய் முத்துலட்சுமி மற்றொரு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள்: இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா ஏற்கனவே புகாருக்கு ஆளானவர். உயர்நீதிமன்றம் கண்டனம் தெ ரிவித்துள்ளது. அரசு வழக்கறிஞர்: தினேஷ்குமார் மீது சில வழக்குகள் உள்ளன. இது போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மரணம் இல்லை. வண்டியூர் டோல்கேட் அருகே போலீஸ் அவுட் போஸ்ட்டிற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் தப்பி ஓட முயற்சித்தார். கால்வாயை தாண்ட முயற்சித்தபோது தவறி விழுந்து இறந்தார். இதை அப்பகுதியிலிருந்த பலர் பார்த்துள்ளனர். இச்சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. விசாரணை துவக்க கட்டத்தில் உள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை. நீதி பதிகள்: இன்ஸ்பெக்டர் மீது புகார் தெரிவிக்கும் நிலையில் இவ்வழக்கை சம்பந்தப்பட்ட போலீசாரே விசாரித்தால் எவ்வாறு நீதி கிடைக்கும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு என்பது விசாரணை யின் போது தான் தெரியவரும். இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்படுகிறது. தினேஷ்குமாரின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். போலீஸ் ஸ்டேஷன் மற்றும் வண்டியூர் டோல்கேட் பகுதியிலுள்ள போலீஸ் அவுட்போஸ்ட்டில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலாவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.