மேலும் செய்திகள்
வைகை அணையில் பாசன நீர் திறப்பு
13-Apr-2025
ஆண்டிபட்டி: மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதையொட்டி வைகை அணையில் இருந்து மே 8 ல் தண்ணீர் திறக்க உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மதுரை சித்திரைத்திருவிழாவில் மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரள்வர். இதனை முன்னிட்டு வைகை அணையில் திறக்கப்படும் நீர் முன்கூட்டியே மதுரை சென்று சேரும் வகையில் நான்கு நாட்களுக்கு முன்பே ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி இந்தாண்டு மே 8 ல் வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.வைகை அணை நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மதுரை சித்திரைத்திருவிழாவிற்காக இந்தாண்டு வைகை அணையில் இருந்து மே 8ல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அணையில் திறக்கப்படும் நீரின் அளவு நீர் வெளியேறும் நாட்கள் போன்ற விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றனர்.நேற்று வைகை அணை நீர்மட்டம் 55.89 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 14 கன அடி. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது.
13-Apr-2025