மதுரை : மதுரை மாநகராட்சியில் ரூ.50 கோடியில் வண்டியூர் கண்மாயில் நடந்துவரும் அழகுபடுத்துதல், படகுசவாரி அமைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை கமிஷனர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.மாநகராட்சியில் துாய்மைப் பணிகள், புதிய ரோடுகள் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், மழைநீர் வடிகால் கட்டமைப்பு, தெரு விளக்குகள் பராமரிப்பு, பள்ளிக் கட்டடங்கள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.வண்டியூர் கண்மாயில் படகு சவாரி ஏற்படுத்துதல், அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகள், கண்மாயின் மேற்கு, வடக்கு பகுதியில் நடைப்பயிற்சி பாதை, ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகு பந்து மைதானம் உள்ளிட்ட பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார். மாட்டுத்தாவணி எம்.ஜி,ஆர்., பஸ்ஸ்டாண்ட், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு விரைவுபடுத்த உத்தரவிட்டார். மேலமாசி வீதி பகுதிகளில் மின்வயர்கள், கேபிள், தொலைபேசி வயர்களை தரைவழியாக கொண்டு செல்வதற்கான பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், செயற்பொறியாளர்கள் கலாவதி, சுந்தர்ராஜ், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவிப் பொறியாளர்கள் அமர்தீப், ரமேஷ்பாபு, சுகாதார அலுவலர் வீரன் உடனிருந்தனர்.