உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆட்டம் பாட்டம் மேள தாளத்துடன் குன்றத்தில் குவிந்த பக்தர்கள் விசாக திருவிழா கோலாகலம்

ஆட்டம் பாட்டம் மேள தாளத்துடன் குன்றத்தில் குவிந்த பக்தர்கள் விசாக திருவிழா கோலாகலம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா நேற்று நடந்தது.கோயிலில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, மூலவர் கரத்தில் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானை விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர்.

பாலாபிஷேகம்

பக்தர்கள் பாத யாத்திரையாக சுமந்துவந்த குடங்களில் இருந்த பால் சண்முகர், வள்ளி,தெய்வானைக்கு மதியம் 2:30 மணிவரை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் பால், இளநீர், பன்னீர், மயில், புஷ்பம், பறவை காவடிகள் எடுத்து வந்தனர். முகத்தில் 12அடி அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். 16கால் மண்டபம் அருகே பூக்குழி இறங்கினர்.

ஆண்டுக்கு ஒருமுறை

கோயிலில் சண்முகர் சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி தெய்வானை, வைகாசி விசாக தினத்தன்று மட்டும், சன்னதியை விட்டு புறப்பாடாகி விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். இது ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே.சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. நேற்றுமுன்தினம் இரவு மழை பெய்தது. நேற்றும் வெயில் வாட்டி வதைக்கும் என பக்தர்கள் அதிகாலை 4:00 மணியிலிருந்தே கோயிலுக்கு பால்குடம் எடுத்து வரத் தொடங்கினர். ஆனால் நேற்று காலை 10:00 மணிவரை வெயிலின் தாக்கம் முழுமையாக இல்லை. காலை 10:30 மணிக்கு மேல் வெயில் சுட்டெரித்து. ஊரின் நுழைவுப் பகுதியிலுள்ள வளைவின் மேல் பகுதியில் மாநகராட்சி சார்பில் தண்ணீருடன் பன்னீர் கலந்து ஷவர் மூலம் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

பக்தர்கள் மகிழ்ச்சி

சன்னதி தெருவில் பால்குட பக்தர்களுக்கு ஒரு வரிசையும், முகத்தில் அலகு குத்தி வருபவர்களுக்கு ஒரு பாதையும் அமைக்கப்பட்டது. கோயிலுக்குள் பால்குடம் எடுத்துச் சென்ற பக்தர்களுக்கு ஒரு பாதையும், சுவாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்களுக்கு ஒரு பாதையும், சிறப்பு தரிசன பக்தர்களுக்கு ஒரு பாதையும் அமைக்கப்பட்டதால் பக்தர்கள் நெரிசலின்றியும், விரைவாகவும் தரிசனம், பாலாபிஷேகம் செய்து திரும்பினர். சன்னதி தெரு முழுவதும் தரையில் தேங்காய் நார் விரிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

வாடிப்பட்டி

தர்மராஜன் கோட்டை பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வாடிப்பட்டியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்தனர். பேரூராட்சி அலுவலகம் அருகே மவுனகுருசாமி மடத்தில் அலகு குத்தி பூக்குழி இறங்கினர். சுவாமிக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று (ஜூன் 10) மாலை 6:00 மணிக்கு கோயிலில் இருந்து முளைப்பாரி, சீர்வரிசையுடன் பட்டு பல்லக்கும், நாளை மின் அலங்கார பூப்பல்லக்கில் சுவாமி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தும் அருள் பாலிக்கிறார்.

சோழவந்தான்

தென்கரைமூல நாத சுவாமி, அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா சுப்ரமணிய சுவாமிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. சுவாமி பூச்சப்பரத்தில் நான்கு ரத வீதிகளில் பவனி வந்தார்.மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. சோழவந்தான் ரயில்வே கேட் அருகில் சித்தி விநாயகர் கோயில் முருகனுக்கு 11 வகை அபிஷேகம் செய்யப்பட்டது.அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் செய்தார் தேனுார் பாலசுப்பிரமணியர் கோயிலில் மகாசஷ்டி, கணபதி, லட்சுமி, சுதர்சன ஹோமம் பாலகுரு பட்டர் தலைமையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை