| ADDED : ஜூலை 23, 2024 05:36 AM
மாவட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு அரசு மாதந்தோறும் ரூ.1500 உதவித் தொகை வழங்குகிறது.இவர்களில் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து உத்தரவு பெற்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 2 ஆண்டுகளாக உதவித் தொகையே கிடைக்காமல் தவிக்கின்றனர்.மாவட்ட நிர்வாகத்தில் கேட்டபோது, இதுவரை நிதிஒதுக்கீடு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.மாற்றுத் திறனாளிகள் கூறுகையில், 'உதவித்தொகை கேட்டு பல போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. இத்தனைக்கும் இந்த துறை முதல்வரின் நிர்வாகத்தில்தான் உள்ளது.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் நிதித்துறையில் சில சீர்திருத்தங்களை செய்ய அப்போதைய நிதி அமைச்சர் தியாகராஜன் முயற்சி மேற்கொண்டார். அப்போது தற்காலிகமாக உதவித் தொகை நிறுத்தப்பட்டது. அதன்பின் அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின் இதுபற்றி பேச யாருமில்லை. இதனால் தற்போது மாத்திரை வாங்கக்கூட வழியின்றி தவிக்கிறோம் என்றனர்.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் கூறுகையில், ''அரசு உத்தரவு பெற்ற பின்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகையே தரவில்லை.இவ்வகையில் மாநில அளவில் ஒரு லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். இத்தொகை மாற்றுத் திறனாளிகளை பராமரிக்க உதவியாக இருக்கும். இது கிடைக்காததால் சமீபத்தில் மாற்றுத் திறனாளிகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினோம். அவர்கள் அரசிடம் தெரிவிப்பதாக கூறினார்.இந்நிலை தொடர்ந்தால் அடுத்த கட்டமாக சட்டசபையில் போராட்டம் நடத்தி, மாற்றுத்திறனாளிகளை அரசிடமே ஒப்படைத்து அவர்களை பராமரிக்க வலியுறுத்துவோம்'' என்றார்.