மதுரை மேற்கு தொகுதியில் தி.மு.க., பகுதி செயலாளர்கள் 11 ஆக அதிகரிப்பு தளபதி ஆதரவு நிர்வாகிகளுக்கு செக்
மதுரை: மதுரையில் அமைச்சர் மூர்த்தியின் வடக்கு தி.மு.க., மாவட்டத்திற்கு உட்பட்ட மேற்கு சட்டசபை தொகுதியில் தற்போதுள்ள 5 பகுதி செயலாளர்கள் பதவியை 11 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இதன்மூலம் நகர் செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., நியமித்த வட்ட செயலாளர்களுக்கு 'செக்' வைக்கப்பட்டுள்ளது.நகர் தி.மு.க., எல்லையில் இருந்த மதுரை மேற்கு சட்டசபை தொகுதி, அமைச்சர் மூர்த்தியின் வடக்கு மாவட்ட எல்லைக்குள் மாற்றப்பட்டது. இந்த தொகுதியில் வட்ட, பகுதி செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் தளபதி ஆதரவாளர்களே தொடர்கின்றனர். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ேஷா இத்தொகுதியில் நடந்தபோது எதிர்பார்த்த கூட்டம் இல்லை. இதுகுறித்து விசாரித்தபோது தளபதி ஆதரவு நிர்வாகிகள் கூட்டம் சேர்க்க ஆர்வம் காட்டவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.வரும் சட்டசபை தேர்தலில் இத்தொகுதியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூவை எதிர்த்து களம் இறக்க வேண்டிய பொறுப்பு அமைச்சர் மூர்த்திக்கு உள்ளது. அவரது தேர்தல் வியூகங்களுக்கு தளபதி ஆதரவு நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மேற்கு தொகுதியில் சில நிர்வாகிகளை மாற்றம் செய்ய கட்சித் தலைமைக்கு மூர்த்தி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றம் செய்தால் அதிருப்தி, குழப்பம் ஏற்படும் என்பதால் வட்ட, பகுதி செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தலைமை அனுமதித்துள்ளது. இதன் மூலம் கூடுதல் பதவிகளில் மூர்த்தி ஆதரவாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.மேற்கு தொகுதி தி.மு.க.,வினர் கூறியதாவது: மேற்கு தொகுதியில் 22 வார்டுகள் உள்ளன. கட்சி ரீதியாக 22 வட்ட, 5 பகுதி செயலாளர்கள் உள்ளனர். அனைவரும் தளபதியால் நியமிக்கப்பட்டவர்கள். இதனால், 2 வார்டுகளுக்கு ஒரு பகுதி செயலாளர் என்ற அடிப்படையில் பகுதி செயலாளர் பதவியை 11 ஆக அதிகரிக்க கட்சி அனுமதியளித்துள்ளது. இதன்படி 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ள வார்டுகளை 2 வட்டங்களாக பிரித்து, புதிய வட்டச் செயலாளர் நியமிக்கவும், கூடுதலாக 6 பகுதி செயலாளர் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டள்ளது. இதன் மூலம் கூடுதல் வட்ட, பகுதி செயலாளர் பதவிகளை, தளபதி மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளுக்கு வழங்கவும் அமைச்சர் தரப்பு முடிவு செய்துள்ளது. இதற்கான தேர்வு தற்போது துவங்கியுள்ளது. இதன் மூலம் தளபதி ஆதரவு நிர்வகிகளுக்கு 'செக்' வைக்கப்பட்டுள்ளது என்றனர்.