உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சிக்கு கை கொடுத்த அ.தி.மு.க.,

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சிக்கு கை கொடுத்த அ.தி.மு.க.,

மதுரை: மதுரையில் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்களால் கோரம் இன்றி கூட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவால் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மதுரையில் ஜூன் 1 ல் தி.மு.க., பொதுக் குழுக் கூட்டம் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி மதுரை வடக்கு, தெற்கு, நகர் மாவட்டம் சார்பில் உத்தங்குடியில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. அதே நேரம் மாநகராட்சி கூட்டமும் நடந்தது. மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் காலை 10:30 மணிக்கு கூட்டம் துவங்கிய போது ஒரு மண்டல தலைவர் உட்பட 8 தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற்றனர். பிற மண்டல, நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் கட்சி கூட்டத்திற்கு சென்று விட்டனர். அப்போது 12 அ.தி.மு.க., கவுன்சிலர் உட்பட 29 பேர் மட்டுமே அவையில் இருந்தனர். கூட்டம் நடத்த குறைந்தது 33 உறுப்பினர்கள் வேண்டும். கோரம் இல்லாததால் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா தலைமையில் அ.தி.மு.க.,, மார்க்சிஸ்ட் கம்யூ., உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.ஆனால் 'கூட்டம் தொடர்ந்து நடக்கும்' என மேயர் தெரிவித்தார். 'கூட்டம் நடத்தினாலும் தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது' என அ.தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சிக்காக கவுன்சில் கூட்டத்தை தி.மு.க., உறுப்பினர்கள் புறக்கணித்த நிலையில், அ.தி.மு.க.,வும் வெளிநடப்பு செய்திருந்தால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் மேயர் கேட்டுக்கொண்டதால் அ.தி.மு.க., ஆதரவு அளித்து வெளிநடப்பை தவிர்த்தது. கோரம் இல்லாத நிலையில் கூட்டம் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.பின் நடந்த விவாதம்:

மேயருக்கு தெரியாதா கம்யூ., கேள்வி

குமரவேல், மா. கம்யூ.,: தி.மு.க., கவுன்சிலர்கள் ஏன் பங்கேற்கவில்லை. கட்சி கூட்டத்தில் பங்கேற்க அவர்கள் சென்ற தகவல் மேயர் கவனத்திற்கு வரவில்லையா. எதிர்காலத்தில் இதுபோல் கோரம் இன்றி கூட்டம் நடத்தக்கூடாது.சோலைராஜா: மாநகராட்சி ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள பி.எப்., வட்டித் தொகை உடன் வழங்க வேண்டும். பொறியியல் பிரிவில் தேர்ச்சி திறன் 2 நிலை அலுவலர்களுக்கு உதவி பொறியாளர் (ஏ.இ.,) பொறுப்பு வழங்குவதால் பணிகளில் தரமில்லை என புகார் எழுந்துள்ளது. அனைத்து வார்டுகளிலும் தகுதியான அலுவலர்கள் நியமிக்க வேண்டும். பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு டிஜிட்டல் மீட்டர் பொருத்த வேண்டும். நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு டாக்டர்கள் உட்பட போதிய அலுவலர்கள் நியமிக்க வேண்டும். மாநகராட்சி இலவச கழிப்பறைகளை நன்றாக பராமரிக்க வேண்டும்.குமரவேல்: மேற்கு தொகுதிக்கு அமைச்சர் மூர்த்தி பொறுப்பேற்ற பின் அங்குள்ள வார்டுகளுக்கு ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி அதிக நிதி ஒதுக்கி திட்டங்கள் நடக்கின்றன. வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில் ஏற்றத்தாழ்வு கூடாது.சோலை செந்தில், தி.மு.க.,: சித்திரை திருவிழா ஏற்பாடுகளை மாநகராட்சி நன்றாக செய்தது. கமிஷனர், மேயர் நடவடிக்கையால் முன்களப்பணியாளர்களால் நகருக்குள் தேங்கிய குப்பை உடனுக்குடன் அகற்றப்பட்டது பாராட்டுக்குரியது.இவ்வாறு விவாதம் நடந்தது.

ஒரு மணி நேரத்தில் முடிந்த கூட்டம்

n மாநகராட்சி கூட்டம் காலை 10:30 மணிக்கு துவங்கி 11:35 மணிக்கு முடிந்தது. போதிய கவுன்சிலர் எண்ணிக்கை இல்லாததால் மாநகராட்சி தரப்பில், கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., கவுன்சிலர்களுக்கு அலைபேசி மூலம் அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் சிலர் அவசரமாக வந்து சேர்ந்ததால் அவையில் 38 கவுன்சிலர்கள் இருந்தனர்.n எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா எதிர்ப்பு தெரிவித்து, 'இதுவரை நடந்த கூட்டங்களில் 10:45 மணிக்கு கவுன்சிலர் வருகை பதிவு செய்வது முடிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அவ்வாறு இல்லையே' என்றார்.n தீர்மானங்கள் 40, 44, 45 ஆங்கிலத்தில் இருந்ததால், அரசின் உத்தரவுகள், சுற்றறிக்கை தமிழில் தான் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துகிறார். ஆனால் இங்கு தீர்மானங்கள் ஆங்கிலத்தில் உள்ளது. இதை தவிர்க்க வேண்டும் என மா.கம்யூ., கவுன்சிலர் குமரவேல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
மே 24, 2025 05:24

இருவரும் கூட்டுக் களவாணிகள். உண்மையில் அவர்கள் இருவரும் எதிரிகள் என்று மக்கள்தான் நம்பி ஏமாந்து போகிறார்கள்.


சமீபத்திய செய்தி