உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செல்லுார் கண்மாயில் பருவமழைநீரை தேக்கி வைக்காமல்... மிஸ் பண்ணிடாதீங்க: தடுப்பணை பணியில் ஷட்டர் அமைக்க மறந்து விடாதீங்க

செல்லுார் கண்மாயில் பருவமழைநீரை தேக்கி வைக்காமல்... மிஸ் பண்ணிடாதீங்க: தடுப்பணை பணியில் ஷட்டர் அமைக்க மறந்து விடாதீங்க

மதுரை: அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை துவங்கும் நிலையில், மதுரையின் நீராதாரமாக விளங்கும் செல்லுார் கண்மாயில் ஷட்டர் அமைக்கும் பணியை துவக்கி, சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும். மதுரை செல்லுாரில்230 ஏக்கரில் இக்கண்மாய் உள்ளது.சாத்தையாறு அணையில் வெளியேறும் தண்ணீர்,குலமங்கலம், பனங்காடி, ஆனையூர், கோசாகுளம் உட்பட 10க்கும் மேற்பட்ட கண்மாய்களை நிரப்பி, இறுதியில் செல்லுார் கண்மாயை நிரப்புகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மீன்கள் துள்ளி விளையாடிய இக்கண்மாய், பலநுாறு ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி அளித்தது. காலப்போக்கில் விளை நிலம் விலை நிலமானது. நீர்வழிப் பாதையில் குடியிருப்புகள் பெருகின. கண்மாயில் கழிவுநீர் கலப்பு அதிகரித்தது. கண்மாய் தற்போது ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருகிறது. குறிப்பாக கூடல்நகர்அருகேகண்மாயை ஒட்டிய பகுதியில் தொழில் நிறுவனங்கள், வீடுகள் என கட்டுமானங்கள் பெருகிவிட்டன. பரந்து விரிந்த கண்மாய் நடுவில் 'மியாவாக்கி' காடுகளை உருவாக்கி, பறவைகள் சரணாலயமாக்க திட்டமிட்டு, பணியை பாதியில்விட்டுவிட்டனர்.பொதுப்பணி, நீர்வளத் துறைகளின் அலட்சியத்தால் துார்வாரப்படாத கண்மாய், நீரின்றி மண் மேடாக, புதர் மண்டி காட்சியளிக்கிறது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்தது. துார்வாராததால் தண்ணீர் முழுவதும்மீனாம்பாள்புரம் 'கலுங்கு' வழியாக வெளியேறி வீணானது. எனவே கலுங்கு பகுதியில் தடுப்பணை கட்டி, 'ஷட்டர்' அமைக்க பொதுப்பணித் துறை திட்டம் வகுத்தது. தற்போதுவரை தடுப்பணை மட்டும் கட்டியுள்ளனர். நான்கு மாதங்களாகியும் பணிகளை தொடராமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் கண்மாயில் எஞ்சிய கழிவுநீரும் வெளியேறுகிறது. கண்மாயில் தண்ணீரை நிலைநிறுத்தாததால் நகரின் பெரும்பகுதியில் நீர்மட்டம் குறைகிறது. நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர் கூறியதாவது: தடுப்பணை கட்டுவதற்காகவே தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தற்போது கண்மாய் வறண்டுள்ளதால் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன. கட்டுமானங்களால் கண்மாய்க்குள் ஊரே உருவாகி வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்மாயை சுற்றி சுவர், இரும்பு வேலி அமைத்து ஆக்கிரமிக்காமல் தடுக்க வேண்டும். தினமலர் செய்தியால் இக்கண்மாயை மேம்படுத்த ரூ. 4.65 கோடி செலவில் சுற்றிலும் பேவர் பிளாக், நடைபாதை, கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன. சமூக விரோதிகள் அவற்றை சேதப்படுத்தி விட்டனர். நடைபாதை புதர் மண்டி, கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இது தொடர்ந்தால் வடகிழக்கு பருவமழையால் பெறும் நீரை தேக்க முடியாது. மழை துவங்கும் முன் இப்போதே துார்வாரி, தடுப்பணையில் உடனே ஷட்டர் அமைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை