உரிய நேரத்தில் உதவித்தொகை கிடைக்கவில்லை அலைந்து திரிவதாக குமுறும் முதியோர்
மேலுார்: தும்பைப்பட்டி பகுதியில் வசிக்கும் முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு உதவித் தொகை கிடைப்பது தாமதமாவதால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.மேலுார் தாலுகாவில் 2913 பேர் முதியோர் உதவித்தொகை பெறுகின்றனர். 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடக்க முடியாததால் வீடுகளில் நேரடியாகவும், அதற்கு குறைவான வயதுடையோருக்கு வங்கிக் கணக்கிலும் உதவித்தொகை வரவு வைக்கப்படுகிறது.ஊனமுற்றோருக்கு மாதம் ரூ. 1,500, மற்றவர்களுக்கு ரூ.1,200 வழங்கப்படுகிறது. தும்பைப்பட்டி ஊராட்சி புதுப்பட்டி, தாமரைப்பட்டி உள்பட 18 கிராமங்களில் ஏராளமானோர் உதவித் தொகை பெறுகின்றனர். இப்பயனாளிகளின் வீடுகளுக்கு ஆறு மாதங்களாக பணம் வராததால் அவர்கள் அப்பகுதி தபால் அலுவலகத்திற்கு நேரில் சென்றனர். அவர்களிடம் தபால் அதிகாரி, 'இங்கு பணம் எடுக்க முடியாது' எனக்கூறி, 4 கி.மீ.,ல் உள்ள அட்டப்பட்டி, பூதமங்கலம் தபால் அலுவலகத்திற்கு அனுப்புகின்றனர்.சமூக ஆர்வலர் ராஜேஸ்வரன் கூறியதாவது : உதவித்தொகையை முதியோர், ஊனமுற்றோர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும். இதற்கு தலைமை தபால் அலுவலகம் மூலம் அடையாள எண் வழங்கப்படும்.தும்பைப் பட்டி தபால் அதிகாரி பொறுப்பேற்று ஆறு மாதமாகியும் அடையாள எண் வழங்காததால், முதியோரை வேறு தபால் அலுவலகத்திற்கு அனுப்புகிறார். தொலைவில் உள்ள தபால் அலுவலகத்திற்கு செல்ல பிறர் உதவியை நாடுவது, பஸ் கிடைக்காதது என முதியோர் அவதிப்படுகின்றனர். இதனால் பணம் கிடைப்பது தாமதமாவதால், அவசிய செலவுகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். கலெக்டர் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லைனல் ராஜ்குமார் கூறுகையில்,தும்பைபட்டி தபால் அதிகாரிக்கு அடையாள எண் வழங்க கால தாமதமாவது குறித்து தற்போதுதான் தெரிய வருகிறது. அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு, குறித்த நேரத்தில் முதியோருக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.