ரூ.5,000 லஞ்சம் மின் ஊழியர் கைது
அலங்காநல்லுார்:மதுரை, கோவில்பாப்பாகுடி பி.ஆர்.சி., காலனியை சேர்ந்த சாமுவேல், 56; டெக்ஸ்டைல் ஏஜன்ட். இவர் வீட்டின் முன் ஆபத்தான முறையில் சென்ற உயர் மின்னழுத்த கம்பியை வேறு பகுதிக்கு மாற்றி அமைக்க, கூடல் நகர் மின்வாரிய அலுவலகத்தில், 10 மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தார். கூடல்நகர் மின்வாரிய போர்மேன் சமயநல்லுாரை சேர்ந்த கணேசன், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். சாமுவேல், மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். நேற்று, சாமுவேலிடம் இருந்து பணத்தை கணேசன் பெற்றபோது, அவரை போலீசார் கைது செய்தனர்.