கால்வாயிலோ அடைப்பு விவசாயிகளோ கடுப்பு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கல்புளிச்சான்பட்டி, நடுவூர் பகுதிகளில் உபரிநீர் கால்வாயை துார்வாராததால் மழைநீர் செல்ல வழியின்றி பயிர்கள் சேதமடைந்து நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விவசாயி பால்பாண்டி கூறியதாவது: திருமங்கலம் கால்வாயில் இருந்து வெளியேறும் உபரிநீர் மலையூர், நடுவூர் கல்புளிச்சான்பட்டி கிராமங்கள் வழியே முதலைக்குளம் கண்மாய்க்கு செல்கிறது. இக்கால்வாயையொட்டி பல ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடக்கிறது. இக்கால்வாயை முறையாக கட்டாமலும், துார்வாராமலும் இருப்பதால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. பருவமழை நேரத்தில் தண்ணீர், நிலங்களில் இருந்து உபரிநீராக இக்கால்வாய் வழியே வெளியேறும். இந்நிலையில் ஏற்கனவே கால்வாயில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வயல்களில் இருந்து உபரிநீர் வெளியேற முடியாமல் பயிர்களை மூழ்கடிக்கிறது. பல ஏக்கர் நிலங்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், மழைநீர் வெளியேறாததால் பயிர்கள் மூழ்கி சேதமடைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நாற்றங்கால் அமைக்கும் நிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாகுபடி செய்ய சிரமமாக உள்ளது. தேங்கிய நீரால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. மழைக்காலத்தில் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாததால் நடுவூர், காலனியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.