| ADDED : நவ 20, 2025 06:06 AM
மேலுார்: ''பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை தமிழக கட்சிகள் கேரள அரசுடன் பேசி அமல்படுத்த வேண்டும்'' என முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன சங்கத் தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 999 ஆண்டுகள் தண்ணீர் தர வேண்டும் என்ற குத்தகை ஒப்பந்தம் உள்ளது. கேரள அரசு அணையில் தண்ணீர் தேக்குவதை 152 அடியை 136 அடியாக குறைத்து விட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் 142 அடியாக நீரை தேக்க உத்தரவிட்டது. அதையும் நடைமுறைப்படுத்தவில்லை. 'ரூல்கர்வ்' முறையில் 134 அடியிலேயே கேரளாவுக்கு தண்ணீர் திறக்கின்றனர். ஆனால் ஒருபோக பகுதியில் கண்மாய் உட்பட நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. கர்னல் பென்னி குயிக் கடைமடை பகுதியில் வாடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அணை கட்டினார். கேரளாவுக்கு விளைபொருட்களை நாங்கள் விளைவித்து தருகிறோம். கேரள மக்கள் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த ஒத்துழைக்க வேண்டும். பொறியியல் வல்லுநர்கள் பார்வையிட்டபின், அணை பாதுகாப்பாக உள்ளதாக அறிக்கை கொடுத்துள்ளனர். ஆனால் கேரள அரசியல்வாதிகள் அணை உடையும் அபாயம் உள்ளதாககூறி, தண்ணீரை தேக்க விடாமல் பிரச்னையை திசை திருப்புகின்றனர். உச்ச நீதிமன்றம் 12 ஆண்டுகளுக்கு முன் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தீர்ப்பு வழங்கியுள்ளதால் மத்திய, மாநில அரசுகள் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். தவறினால் சாகுபடி செய்ய வழியின்றி விவசாயிகள் கிராமங்களைவிட்டு நகரத்திற்கு செல்லும் அவலம் நிலவுகிறது. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், குறிப்பாக காங்கிரஸ், கம்யூ., கட்சிகள் கேரள அரசிடம் பேசி விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றார்.