மக்காச்சோளத்தில் படைப்புழு பாதிப்புக்கு நிவாரணம் வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
மதுரை:' பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதியில் படைப்புழுக்களால் பாதிப்படைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, மக்காச்சோள விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி அளித்த மனு: பேரையூர் தாலுகாவில் மக்கா சோளப்பயிர்களில் படைப்புழுக்கள் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ. 25ஆயிரம் வரை இழப்பீடு ஏற்பட்டுஉள்ளது என கூறியிருந்தார். இதேபோல டி.கல்லுப்பட்டி ஒன்றியம் நல்லமரம் என்.முத்துராமலிங்கபுரம் விவசாயிகளும்கலெக்டரிடம் மனு அளித்தனர். விவசாயிகள் பழனிகுமார், பாலசுப்ரமணியன் கூறியதாவது: கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 35 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக மக்காச்சோளம் விதைக்கப்பட்டது. அப்போது போதுமான மழை இல்லாததால் பயிர்கள் முளைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டாவதாக விதைப்பு செய்தோம். அதன்பின் பயிர்கள் வளர்ந்துள்ளன. ஆனால் இம்முறை பயிர்கள் வளர்ந்த நிலையில் படைப்புழுக்களின்தாக்கம் அதிகரித்துவிட்டது. போதுமான மழையும் இல்லை. படைப்புழுக்களால் பயிர்கள் சேதமடைந்து மகசூல் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.