உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாமதமாக நிரம்பிய தண்ணீரால் நெல் பயிரிடத் தயங்கும் விவசாயிகள்

தாமதமாக நிரம்பிய தண்ணீரால் நெல் பயிரிடத் தயங்கும் விவசாயிகள்

அவனியாபுரம்: கண்மாய்களுக்கு தாமதமாக தண்ணீர் வருவதால் நெல் பயிரிட விவசாயிகள் ஆர்வமின்றி உள்ளனர்.வைகை ஆற்றுப்பகுதிகளில் மழை பெய்தால் நிலையூர் கால்வாய் வழியாக தென்கால், நிலையூர் பெரிய கண்மாய், பெருங்குடி உள்பட பல்வேறு கண்மாய்களுக்கும் மழைநீர் செல்லும். வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் இக்கண்மாய்கள் நிரம்பும். இந்தாண்டு இப்பகுதியில் பெய்த தொடர் மழையால் சில கண்மாய்கள் நிரம்பியுள்ளன. சில கண்மாய்கள் பாதி நிரம்பியுள்ளன.இப்பகுதிகளில் ஆழ்குழாய், கிணறுகளில் தண்ணீர் உள்ள விவசாயிகள் ஏற்கனவே நெல் நடவு செய்து விட்டனர். கண்மாய் தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள் நடவு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: வழக்கமாக ஆடி 18ல் நாற்றுப் பாவி ஆவணி, புரட்டாசியில் நடவு செய்வோம். தாமதமாக நாற்று பாவுவோர் ஐப்பசி முதல் வாரத்திற்குள் நடவு செய்துவிடுவர். இந்தாண்டு சில நாட்களாகதான் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நாற்றுப் பாவி, ஒரு மாதத்திற்கு பின்பு நடவு செய்வது பருவம் தவறிய பயிர் ஆகிவிடும்.அதனால் விளைச்சல் குறையும். உரச் செலவு, களைஎடுக்கும் செலவுகள் அதிகரிக்கும். நோய் தாக்கமும் அதிகமாகும். பெருமளவு நஷ்டப்பட நேரிடும். அதனால் இந்தாண்டு நெல் பயிரிடவில்லை. தற்போது கண்மாய்க்கு வரும் தண்ணீர் கோடை நடவுக்குத்தான் உதவும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !