தர்ப்பூசணி விலை வீழ்ச்சியால் இழப்பீடு கோரும் விவசாயிகள்
மதுரை: தர்ப்பூசணி பழங்களில் ஊசி போட்டு நிற கலப்படம் செய்கின்றனர் என, ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தர்ப்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு, கிலோ, 15 ரூபாய்க்கு விற்ற தர்ப்பூசணி தற்போது, கிலோ, 3 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:கள்ளச்சாராய விற்பனையை போலீசாரால் தடுக்க முடியாத நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தோர் குடும்பத்திற்கு தலா, 10 லட்சம் ரூபாயை அரசு இழப்பீடாக வழங்கியது.அதுபோல, உணவு பாதுகாப்புத்துறையால் தர்ப்பூசணி விலை சரிவடைந்து, தர்ப்பூசணி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஏக்கருக்கு தலா, 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.'தர்ப்பூசணி பழத்தில் செயற்கை சாயம் ஏற்றப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தவறான தகவல் பரப்பியதால், விலை வீழ்ச்சியடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், தர்ப்பூசணி விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.