உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாழையில் பழுப்பால் விவசாயிகள் தவிப்பு

வாழையில் பழுப்பால் விவசாயிகள் தவிப்பு

மேலுார் : மேலுார் பகுதி வாழை மரத்தின் இலைகள் பழுப்பாக மாறுவதால் விவசாயிகளின் கவலையடைந்துள்ளனர். மேலுார் தாலுகா முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரமே வாழை விவசாயம்தான். பூவன், ரஸ்தாளி, நாடு, முப்படை என பல ரகங்களில் பயிரிட்டுள்ளனர். பொதுவாக வாழை நடவு முதல் அறுவடை வரை 12 மாதங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் செலவு செய்து வாழைத்தாரை அறுவடை செய்வர். இதில் நாடு மற்றும் முப்பட்டை ரக வாழைகள் பயிரிட்டு 8 மாதங்கள் ஆன நிலையில் கடந்த சில தினங்களாக வாழை இலைகள் பழுப்பு நிறமாக மாற ஆரம்பித்துள்ளது. மேலவளவு விவசாயி கோபாலன் கூறியதாவது: கூட்டுறவு சொசைட்டியில் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு செய்தேன். குலைதள்ளும் பருவத்தில் இலைகள் பழுப்பு நிறமாகவும், அதில் கரும்புள்ளிகளாகவும் காணப்படுகிறது. ஒரு இலையில் ஆரம்பிக்கும் பழுப்பு நிறம், சில நாட்களில் பரவி இலைகள் முழுவதும் பழுப்பு நிறமாக மாறி விடுகிறது. வேரில் இருக்கும் சத்துகளை இலைகள் உறிஞ்சி சூரிய ஒளி மூலம் ஒளிசேர்க்கை நடப்பதால் காய்கள் முழுவளர்ச்சி அடையும். தற்போது இலை பழுப்பு நிறமாக மாறுவதால் காய்களின் வளர்ச்சி பாதிப்படைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகிறோம். தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நோய் தாக்குதலுக்கு ஆளான மரங்களை காக்கவும், பாதிப்பு இல்லாத மரங்களுக்கு நோய் வராமல் தடுக்கவும் வழி காட்ட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி