4 ஆண்டுகளாக இருளில் பரிசோதனை பரிதாபத்தில் சுகாதார மையம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தென்பழஞ்சி துணை சுகாதார மையத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கர்ப்பிணிகள், குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இங்கு வாரத்தில் 2 நாட்கள் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை நடக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தென்பழஞ்சி, சின்ன சாக்கிலிப்பட்டி, பெரிய சாக்கிலிப்பட்டி, வெள்ளை பாரப்பட்டி, மணப்பட்டி, மீனாட்சி காலனி பகுதி கர்ப்பிணிகள் வருகின்றனர். குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் செவிலியர், கர்ப்பிணிகள், குழந்தைகள் சிரமம் அடைகின்றனர். இருளில்தான் பரிசோதனை செய்கின்றனர். இது குறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.மே மாதம் நடந்த ஜமாபந்தியில் வேடர் புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி கண்மாய்கள் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பாண்டி, இயக்குனர்கள் சிவராமன், முருகன் ஆகியோர் ஆர்.டி.ஓ. விடம் மனு கொடுத்தனர். இதுவரை நடவடிக்கை இல்லை. உடனடியாக மின் இணைப்பு கொடுத்து, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.