வெளிமாவட்ட போலீசாரை பணியில் ஈடுபடுத்த வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசாணைப்படி வெளிமாவட்ட போலீசாரை பணியில் ஈடுபடுத்த தாக்கலான வழக்கில் அரசாணையை அமல்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.கல்குளம் அருகே வெள்ளிகோடு ஹோமர்லால் தாக்கல் செய்த பொதுநல மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் பல ஆண்டுகளாக குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றங்கள் அதிகரிக்கின்றன. காரணம் குற்றங்களில் ஈடுபடுவோர் அம்மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உறவினர், நண்பர்களாக இருப்பதே.13 ஆண்டுகளுக்கு முன் வன ஊழியர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை முழு விசாரணை இல்லை. உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தேங்காய்ப்பட்டணத்தில் 1998 மற்றும் 1999 ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி நீதிபதி முருகேசன் விசாரித்தார். அவர் தமிழக அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில்,'கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம்வரை அதே மாவட்டத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.இது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு ஆதாரமுள்ள மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்கிறது. காவல்துறையின் ஒழுங்கு, கட்டுப்பாட்டை பாதிக்கிறது. இதை தவிர்க்க வெளிமாவட்டத்தினரை இங்கு பணியில் அமர்த்த அரசு சிந்திக்க வேண்டும்,' என பரிந்துரைத்தார். இதை ஏற்று தமிழக அரசு 2000 ல் அரசாணை வெளியிட்டது. அதை செயல்படுத்தவில்லை. மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைய காரணமாக அமைகிறது. சில போலீசார் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.பொய் வழக்கு பதிவு, கட்டப்பஞ்சாயத்து, குற்றவாளிகள் கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதை தடுக்க இம்மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரை வெளிமாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய வேண்டும். அரசாணைப்படி வெளிமாவட்ட போலீசாரை பணியில் ஈடுபடுத்தக்கோரி தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கே.செல்வகுமார்,''அரசாணையை அமல்படுத்தாததால் திருப்புவனத்தில் போலீசாரால் அஜித்குமார் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன,'' என்றார்.அரசு பிளீடர் திலக்குமார் ஆஜரானார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசாணையை அமல்படுத்தாததால் தேவையற்ற சம்பவங்கள் நடக்கின்றன. அரசாணையை அமல்படுத்த வேண்டும். அதில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து உள்துறை செயலர், டி.ஜி.பி.,மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.