சட்டவிரோத குவாரியை தடுக்க நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடியில் சட்டவிரோதமாக செம்மண் அள்ளப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.பழைய ஆயக்குடி ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:மேற்குத் தொடர்ச்சி மலை அருகே கிழக்கு ஆயக்குடி உள்ளது. இங்கு பட்டா நிலத்தில் சிலர் சட்டவிரோதமாக செம்மண் குவாரி நடத்துகின்றனர். அதிக ஆழத்தில் மண் அள்ளப்படுகிறது. விவசாயத்தை பாதிக்கிறது. எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.இது பாதுகாக்கப்பட்ட பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலை அல்லது அருகிலுள்ள பகுதிகளில் குவாரி நடத்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும். அவ்வாறு யாரும் அனுமதி பெறவில்லை. தமிழக தலைமைச் செயலர், திண்டுக்கல் கலெக்டருக்கு புகார் அனுப்பினேன்.சட்டவிரோத குவாரியை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது வழக்கறிஞர் கமிஷனரை நியமிக்க வேண்டும். மண் அள்ள தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.சக்திவேல் அமர்வு: சட்டவிரோதமாக ஆயக்குடியில் செம்மண் அள்ளுவதை தடுக்க தலைமைச் செயலர், கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை இதுபோல் நிலுவையிலுள்ள மற்றொரு வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.