உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீர் குழாய் பள்ளத்தில் விழுந்து பலி செக்யூரிட்டி குடும்பத்திற்கு இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

குடிநீர் குழாய் பள்ளத்தில் விழுந்து பலி செக்யூரிட்டி குடும்பத்திற்கு இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : மதுரையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் செக்யூரிட்டி விழுந்து பலியானதற்கு அவரது குடும்பத்திற்கு ரூ.13 லட்சத்து 42 ஆயிரம் இழப்பீடு வழங்க ஒப்பந்ததாரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த வள்ளி தாக்கல் செய்த மனு:எனது கணவர் ஒப்பந்த அடிப்படையில் மதுரை நாகமலை புதுக்கோட்டையிலுள்ள ஒரு பள்ளியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தார். பள்ளியிலிருந்து 2009 அக்.1 இரவு சைக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். பாலர் இல்லம் அருகே ஒரு கோயில் பகுதியில் தண்ணீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்தார். காயமடைந்த அவர் சம்பவ இடத்தில் இறந்தார். திருப்பரங்குன்றம் குடிநீர் திட்டப் பணிக்காக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அப்பணியை ஒப்பந்ததாரர் மேற்கொண்டார். எச்சரிக்கை பலகை, தடுப்பு, மாற்றுப்பாதை என எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றி பள்ளம் தோண்டி திறந்த நிலையில் இருந்தது. இழப்பீடு வழங்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், குடிநீர்வடிகால் வாரிய நிர்வாக பொறியாளருக்கு மனு அனுப்பினேன். வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: சம்பவம் குறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணை முடிந்து திருமங்கலம் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணை நிலுவையில் உள்ளது. குற்றப்பத்திரிகையில், 'திருநகர் - தென்பழஞ்சி சாலையை ஒட்டியுள்ள பகுதியில் குடிநீர் குழாய் அமைக்க ஒப்பந்ததாரர் பள்ளம் தோண்டியுள்ளார்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை இன்றி திறந்து வைக்கப்பட்டிருந்ததால், பள்ளத்தில் விழுந்து மனுதாரரின் கணவர் இறந்தார். ஒப்பந்ததாரரின் கவனக்குறைவால்தான் விபத்து ஏற்பட்டது.கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், குடிநீர்வடிகால் வாரிய நிர்வாக பொறியாளரின் கவனக்குறைவு எதுவும் இல்லை. இழப்பீடு வழங்க அவர்களை பொறுப்பாக்கத் தேவையில்லை. இழப்பீடு வழங்க வேண்டியது ஒப்பந்ததாரரே. அவர்மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.13 லட்சத்து 42 ஆயிரத்தை 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். தொகையில் தலா 50 சதவீதத்தை மனுதாரரும் அவரது மகனும் சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை