அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்க வழக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் அழகன்குளம் அசோகன் தாக்கல் செய்த பொதுநல மனு: சங்க காலத்தில் அறியப்பட்ட பல துறைமுகங்களுள், வைகை ஆறு வங்கக்கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள, 'மருங்கூர்பட்டிணம்' என முன்னர் அழைக்கப்பட்ட அழகன்குளம் துறைமுகமும் ஒன்று. 1984ல் இப் பகுதி வி.ஏ.ஓ., தமிழக தொல்லியல் துறை இயக்குநரிடம் பழைய நாணயங்களை வழங்கி, கோட்டைமேட்டில் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்தார். அதனடிப்படையில், முதற்கட்ட அகழாய்வு நடத்தப்பட்டு பல நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1986 - 87ல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அதிகாரப்பூர்வ அகழாய்வு நடந்தது. அதில் மட்பாண்டங்கள், உருவம் பதித்த பானைகள், 4ம் நுாற்றாண்டு ரோமன் நாணயங்கள், எலும்புகளால் ஆன சீப்பு ஆகியவை கிடைக்கப்பெற்றன. அவை 2360 ஆண்டுகள் பழமையானவை என்பது ஆய்வில் தெரிந்தது. பல்வேறு கட்ட அகழாய்வுகள் பின் 1990 - 91ல் நடந்த அகழாய்வில், ஹரப்பா நாகரிகத்தில் காணப்பட்டதைப் போன்ற பக டைகள் கண்டெடுக்கப்பட்டன. கி.பி., 350 முதல் 320 வரையிலான பாண்டியப்பேரரசுக்குச் சொந்தமான பின்புறம் மீன்களுடன் யானை உருவம் பொறித்த நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இதேபோன்று 1993 - 94, 1995 - 96, 1 997ல் அகழாய்வுகள் நடந்தன. அதில் விலையுயர்ந்த கற்கள், ரோமானிய கப்பல் பொறிக்கப்பட்ட உருவங்கள், 4ம் நுாற்றாண்டு வெள்ளி நாணயங்கள், பாண்டியரின் சதுர நாணயம் கிடைக்கப்பெற்றன. இவை அழகன்குளத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்தாலும், தற்போது எங்கே வைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. இறுதியாக 2016 - 17ல் நடந்த அகழாய்வில் 13,000 கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேற்கண்ட அகழாய்வுகளின் படி, கி.மு., 4ம் நுாற்றாண்டு முதல் கி.பி., 5ம் நுாற்றாண்டு வரை, அழகன்குளம் துறைமுகம், கிழக்கு மேற்கு நாடுகளுடன் செழிப்பான வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கீழடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் போன்று அழகன்குளத்திலும் அமைக்க அரசு 91 ஏக்கர் நிலம் ஒதுக்கி 2020ல் அரசாணை பிறப்பித்தது. ஆனால் மத்திய மாநில தொல்லியல் துறையினர் இதுவரை இங்கு அருங்காட்சியகம் அமைக்க முன்வரவில்லை. அகழாய்வு செய்யப்பட்ட இடங்கள் பராமரிப்பின்றி கருவேல மரங்களால் மூடப் பட்டுள்ளன. தற்போது அகழாய்வுகள் நடந்த அழகன்குளத்தில் இருந்து 27 கி.மீ., தொலைவில் உள்ள ராமநாதபுரம் மண்டபத்தில் அருங்காட்சியகம் நிறுவ திட்டமிட்டுள்ளனர். கீழடி, ஆதிச்சநல்லுார் பகுதிகளில் அகழாய்வு செய்யப்பட்ட இடங்களுக்கு அருகிலேயே அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதால் அதன் வரலாறு, பண்பாட்டை மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் 2016 - 17ல் செய்யப்பட்ட அகழாய்வு அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. அதனை வெளியிடவும், மண்டபத்தில் மியூசியம் அமைக்க தடை விதித்து அழகன் குளத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும், அகழாய்வு இடங்களை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் தீபக் அரசு ஆஜரானார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு 2016 - 17ல் செய்யப்பட்ட அகழாய்வின் அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக பதிலளிக்க மத்திய மாநில தொல்லியல் துறை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டு அக். 27க்கு வழக்கை ஒத்திவைத்தனர்.