கிருதுமால் நதியை பாதுகாக்க வழக்கு அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்
மதுரை: கிருதுமால் நதியை பாதுகாக்க தாக்கலான வழக்கில் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை வழக்கறிஞர் மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை வைகை ஆற்றின் துணை நதி கிருதுமால். இது நாகமலை அடிவாரம் துவரிமானில் உற்பத்தியாகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 74 கி.மீ., கிருதுமால் பாய்கிறது. மதுரையில் 120 அடி அகலத்தில் இருந்த கிருதுமால் பராமரிப்பு இல்லாததால் தற்போது 10 அடியாக சுருங்கி விட்டது. குப்பைகள் குவிக்கப்படுகின்றன. கழிவுநீர் கலக்கிறது. மாசடைந்துள்ளது. நதியை பாதுகாக்க அதன் எல்லைகளை வரையறுக்க 'டிஜிட்டல் சர்வே' செய்ய வேண்டும். நதியின் கரையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கழிவுநீர் கலப்பது, குப்பைகள் குவிப்பதை தடுக்க வேண்டும். கிருதுமால் நதிக்கு வைகையிலிருந்து போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்ய தமிழக நீர்வளத்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு நீர்வளத்துறை முதன்மை செயலர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் கலெக்டர்கள் ஒருங்கிணைந்த அறிக்கையை அக்.16 ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.