உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திட்டமிடாமல் அவசர கதியில் மாந்தோப்புக்கான இன்சூரன்ஸ்

திட்டமிடாமல் அவசர கதியில் மாந்தோப்புக்கான இன்சூரன்ஸ்

மதுரை : திட்டமிடல் இன்றி அவகாசம் வழங்காமல் அவசர கதியில் மாந்தோப்புக்கான இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி 10 நாட்களுக்குள் (டிச.,31) பிரிமீயத்தொகை செலுத்துமாறு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தென்னை மரத்திற்கும் மாமரத்திற்கும் மத்திய அரசின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதன் முறையாக தென்னை மரத்திற்கான காப்பீடு திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. 7 முதல் 60 வயதுடைய நெட்டை வகை 4 முதல் 60 வயதுடைய குட்டை ரகம், குட்டை நெட்டை, நெட்டை குட்டை ரகங்களுக்கு தனி மரமாக காப்பீடு செய்யலாம். குறிப்பாக 4 முதல் 15 வயதுடைய மரங்கள் என்றால் மரம் ஒன்றுக்கு ரூ.2.25 பிரீமியத்தொகை செலுத்தினால் இழப்பு ஏற்படும் போது ரூ.900 வழங்கப்படும். 16 முதல் 60 வயதுடைய மரம் ஒன்றுக்கு ரூ.3.50 செலுத்தினால் காப்பீட்டு இழப்புத்தொகையாக ரூ.1750 வழங்கப்படும்.எத்தனை ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளதோ அத்தனைக்கும் பெயிண்டால் வரிசை எண்களை குறிப்பிட வேண்டும். குறைந்தது 5 மரங்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும். அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து காப்பீடு திட்டத்தில் சேரலாம். மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும் என கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் இந்தியாவில் முதன்முறையாக மாந்தோப்பிற்கான வானிலை பயிர் காப்பீட்டு திட்டம் சமீபத்தில் தாலுகா அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மாறி வரும் தட்பவெப்பநிலையால் திடீரென அதிக மழை பெய்தாலோ, பொய்த்தாலோ இழப்பீடு உண்டு. அதேபோல வெயில் அதிகம் தாக்கினாலும் இழப்பீடு உண்டு. மழையோ, வெயிலோ பூக்கும் பருவத்தில் பாதிப்பை ஏற்படுத்தினால் இழப்பீடு கோரமுடியும். ஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் இருந்தாலும் ஏக்கருக்கு ரூ.365 வீதம் பிரீமியத் தொகை செலுத்த வேண்டும். பாதிப்பு ஏற்படும் போது அதிகபட்சமாக ரூ.6072 வழங்கப்படுகிறது. பயிரின் மகசூல் பாதிப்பு, மரத்தின் பாதிப்பு, பிற காரணங்களால் ஏற்படும் பாதிப்புக்கு இந்த திட்டத்தில் இழப்பீடு பெறமுடியாது.பரிசோதனை அடிப்படையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மாந்தோப்பு வானிலை பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு டிச.,31 க்குள் பிரீமியத் தொகை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மா விவசாயிகளை முழுமையாக இத்திட்டம் சென்று சேரவில்லை. எனவே தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அதிகாரிகளுக்கு அவகாசம் வழங்க வேண்டும். டிச.,31 என்பதை கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை