| ADDED : ஜன 12, 2024 06:47 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் ஜன.,15 முதல் ஜல்லிக்கட்டு களைகட்டத் துவங்கிவிடும். அன்று அவனியாபுரம், ஜன.,16 பாலமேடு, ஜன.,17ல் அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், வெங்கடேசன் எம்.எல்.ஏ., உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், காளையர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதள பதிவு ஜன.,11 மதியம் நிறைவு பெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 176 காளைகள், 4514 வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவனியாபுரத்தில் பங்கேற்க 2400 காளைகளும், 1318 வீரர்களும், பாலமேட்டில் பங்கேற்க 3677 காளைகள், 1412 வீரர்கள், அலங்காநல்லுாரில் 6099 காளைகள், 1784 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் இவ்விண்ணப்பத்தை ஆய்வு செய்து வருகிறது. இரட்டைப் பதிவு, சரியான ஆவணங்கள் இல்லாதவை நிராகரிக்கப்படும்.இப்போட்டிகளில் சிறந்ததாக தேர்வு செய்யப்படும் காளைக்கு ஒரு கார், சிறந்த வீரருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் ஒரு கார் பரிசாக வழங்கப்படும். அலங்காநல்லுார் கீழக்கரையில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கம் இம்மாத இறுதிக்குள் முதல்வரால் துவக்கி வைக்கப்படும். துவக்க விழாவின்போது 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.