கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் குன்றத்து மலையில் டிச. 13ல் மகாதீபம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச. 13ல் மலைமேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது.நேற்று காலை சர்வ அலங்காரத்தில் சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். காலை 8:40 மணிக்கு கொடிக் கம்பத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். பட்டுத் துணி, மா இலை, தர்ப்பை புல் வைத்து கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டு அடிப்பாகத்தில் பால் உள்பட பல்வகை திரவிய அபிஷேங்கள் நடந்தன. திருவிழா நம்பியார் சிவகுரு சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. சுவாமி வீதி உலா
இன்று முதல் டிச.13 வரை தினமும் காலை சிம்மாசனம், தங்கச்சப்பரம், சப்பரம், விடையாத்தி சப்பரத்திலும், இரவில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்கக் குதிரை, காமதேனு வாகனங்களிலும் சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா வருவர். சைவசமய ஸ்தாபித லீலை
திருவிழாவின் 6ம் நாளான டிச. 10ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, டிச.11 காலையில் கங்காளநாதர் சுவாமி புறப்பாடு, மாலையில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்பாள், காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர்.டிச.12ல் சுவாமிக்கு பட்டாபிஷேகம், டிச. 13 காலையில் தேரோட்டம், மாலையில் மலைமேல் மகா தீபம், இரவு சொக்கப்பனை தீபக் காட்சி, டிச.14ல் தீர்த்த உற்ஸவம் நடக்க உள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா, தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி பங்கேற்றனர்.