திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
திருப்பரங்குன்றம்:முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின், இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இக்கோவிலில், 2.37 கோடி ரூபாயில் திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகத்திற்காக ஜூலை 10ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று மாலை ஏழாம் கால பூஜை நடந்ததை தொடர்ந்து, இரவு மூலவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.இன்று அதிகாலை 5:25 முதல் 6:10 மணிக்குள் ராஜகோபுரம், வல்லப கணபதி விமானம், கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமான கலசங்களில் புனித நீரால் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதே நேரத்தில் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மூலவர்களுக்கு மஹா அபிஷேகம் முடிந்து, தீபாராதனை காட்டிய பின், மூலவர்களை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இன்று மதியம் நடை அடைப்பு இல்லை.தரிசனத்திற்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று திரும்ப இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கும்பாபிஷேகத்தை நகர் எங்கும் காண, 26 இடங்களில் மெகா எல்.இ.டி., 'டிவி'கள் வைக்கப்பட்டுள்ளன. ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்புக்காக 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதற்கிடையே, திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகத்திற்காக மீனாட்சி, சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகினர். இதை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை, இன்று முழுதும் அடைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.