உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கடந்தாண்டு நாய்க்கடிக்கு ஆளானோர் 45,404 பேர்; விழிப்புணர்வால் 98 சதவீதம் பேருக்கு தடுப்பூசி

கடந்தாண்டு நாய்க்கடிக்கு ஆளானோர் 45,404 பேர்; விழிப்புணர்வால் 98 சதவீதம் பேருக்கு தடுப்பூசி

மதுரை : ஆண்டுதோறும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் அதேநேரத்தில் 'ஏ.ஆர்.வி.,' எனப்படும் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வும் மதுரையில் அதிகரித்துள்ளது.மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை 2020ல் மொத்தம் 44 ஆயிரத்து 216 பேர் நாய்க்கடிக்கு ஆளாகினர். 2021 ல் 48 ஆயிரத்து 323 பேரும், 2022 ல் 46 ஆயிரத்து 962 பேரும், 2023ல் 47 ஆயிரத்து 291 பேரும், 2024ல் 45 ஆயிரத்து 404 பேரும் பாதிக்கப்பட்டனர். நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடிபட்ட முதல் நாள், 3ம் நாள், 7 மற்றும் 28ம் நாட்களில் ஏ.ஆர்.வி. தடுப்பூசி செலுத்த வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய உடன் அனைத்து தகவல்களும் கம்ப்யூட்டரில் பதிவேற்றப்படும். அடுத்தடுத்த டோஸ் தடுப்பூசிகளுக்கு நாங்களே அலைபேசி மூலம் நினைவூட்டி வரவழைக்கிறோம் என்கிறார் மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன்.அவர் கூறியதாவது: 'ஏ.ஆர்.வி.,' மருந்து பாட்டில் (வயல்) ஒன்றின் மூலம் 4 முதல் 5 பேருக்கு தடுப்பூசி செலுத்தலாம். அந்த வகையில் 2020 ல் 27 ஆயிரத்து 210 பாட்டில், 2021 ல் 31 ஆயிரத்து 694 பாட்டில், 2022 ல் 32 ஆயிரத்து 436 பாட்டில், 2024 ல் 32 ஆயிரத்து 886 பாட்டில், 2024 ல் 35 ஆயிரத்து 537 பாட்டில் தடுப்பூசிகள் பயன்படுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் முறையாக 4 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். உயிரிழப்பையும் குறைத்துள்ளோம். மீதியுள்ளோர் வெளியூரோ அல்லது இடம் மாறி செல்கின்றனர். தமிழ்நாடு மருந்து சேவை கழகம் (டி.என்.எம்.எஸ்.சி., ) மூலம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பெறுவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை