குழந்தை நுரையீரலில் எல்.இ.டி., லைட்: மதுரை அரசு மருத்துவமனையில் அகற்றம்
மதுரை:திண்டுக்கல், குட்டத்துப்பட்டியைச் சேர்ந்த 8 மாத பெண் குழந்தை, இருமல், மூச்சுத்திணறல், காய்ச்சலுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அக்., 28ல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.எக்ஸ்ரேவில் குழந்தையின் இடதுபக்க நுரையீரல் மூச்சுகுழாயில் ஊசிபோன்ற பொருள் இருப்பது தெரிந்ததால், சிறிய 'பிராங்கோஸ்கோப்பி' கருவி மூலம் அப்பொருள் அகற்றப்பட்டதாக, மதுரை அரசு மருத்துவமனை நுரையீரல் பிரிவு துறை தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:குழந்தை மூச்சுகுழாய் சிறிதாக இருக்கும். மயக்க மருந்துடன் 'பிராங்கோஸ்கோப்பி' கருவியை உள்ளே செலுத்துவது சிக்கலாக இருந்தது. பிரத்யேக முகக்கவச முறையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. நடை பழக ஆரம்பிக்கும் குழந்தைகள் தான் ஏதாவது பொருளை வாயில் இடுவர். எட்டு மாத குழந்தை என்றாலும், நுரையீரலில் அந்த பொருள் சிக்கி 2 முதல் 3 வாரங்கள் ஆகியிருக்கலாம். நுரையீரலுடன் ஒட்டாத நிலையில் இருந்ததால் கருவி வாயிலாக அப்பொருளை அகற்ற முடிந்தது. வெளியே எடுத்த பின்பே, 'ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்.இ.டி. லைட்' என, தெரிந்தது.இவ்வாறு அவர் கூறினார்.