உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம்: அறிக்கை சமர்ப்பிப்பு சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம்: அறிக்கை சமர்ப்பிப்பு சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை

மதுரை : மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்திடம் (டிட்கோ) விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மதுரை விமான நிலையத்தின் ஓடுதளம் தற்போது 7 ஆயிரத்து 500 அடி நீளம் கொண்டது. இதனை 2009ல் 12 ஆயிரத்து 500 அடியாக அதிகரிக்க திட்டமிட்டாலும் பல்வேறு காரணங்களால் நிறைவேறவில்லை. ஓடுதள விரிவாக்கப் பணிக்காக 640 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. எனினும் 2022ல் 'சப்வே' அமைக்கும் பணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக திட்டம் நிறைவேறுவதில் தொய்வு ஏற்பட்டது.இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றுடன் இணைந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதலில் ரூ.205 கோடிக்கு ரோடு அமைத்தல், மேற்கு சுற்றுச் சுவர் எழுப்புதல், பாசன கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான திட்டம் வகுக்கப்பட்டது. மதிப்பாய்விற்கு பிறகு சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ரூ. 105 கோடிக்கு திட்டம் வகுக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் புதிய கண்மாய்கள் வெட்டப்படும்.பழைய கண்மாய்களில் உள்ள தண்ணீர், கிருதுமால், வைகை நதிகளின் கிளைகளுக்கு செல்லும் வகையில் திருப்பிவிடப்படும். கூடுதலாக ரூ.10 கோடி மதிப்பிலான திட்டத்தில் ஆனைக்குளம், சின்ன உடைப்பு, இலந்தைக்குளம் போன்ற ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கண்மாய்களை புனரமைத்தல், துார்வாருதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். இத்திட்ட அறிக்கை விமான நிலைய திறனை விரிவுபடுத்துவதுடன் சுற்றுச்சூழல், உள்ளூர் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்டது என்றார்.விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில் ''ஆணையம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து பல்வேறு துறைகளின் அனுமதி பெறும்பட்சத்தில் விரிவாக்கப் பணிகள் துவங்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை