| ADDED : பிப் 24, 2024 05:13 AM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் அனைத்து அலுவலகங்களையும் பூட்டி 8வது நாளாக தொடரும் அலுவலர்கள் போராட்டத்தால் ஒட்டுமொத்த நிர்வாகப் பணிகளும் முடங்கியுள்ளன. மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.பல்கலையில் நிலவும் நிதி பற்றாக்குறையால் 2 மாதங்களாக அலுவலர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. துணைவேந்தர், பதிவாளருடன் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால் பிப்., 14 முதல் அனைத்து துறை, புலங்களின் அறைகளை பூட்டி 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.சான்றிதழ் வழங்குதல், பருவத் தேர்வுகள் விடைத்தாள் திருத்தம், வகுப்பறைகள் முடக்கம், பணி நியமனங்களுக்கு உண்மைத் தன்மை சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட பணிகளும் பாதித்துள்ளன. தற்போது டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர். தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமை கோரி 'தமிழ் மீடியம்' சான்று கோரி பலர் தினம் பல்கலைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். வெளிமாநிலத்தவர்கள் சான்றிதழ் கேட்டு வருகின்றனர்.அலுவலர்கள் கூறியதாவது: சம்பளம் தான் வாழ்வாதாரம். 2 மாதங்களாக குடும்பத்துடன் தவிக்கிறோம். ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டு, முதுமை கால மருத்துவ செலவை கூட மேற்கொள்ள முடியாமல் கண்ணீர் விடுகின்றனர். துணைவேந்தர் தரப்பில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. இதே நிலை தொடர்ந்தால் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும். அதற்குள் தமிழக அரசு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அரசு ஊழியர் சங்கம் கண்டனம்
இவ்விவகாரம் குறித்து அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் நீதிராஜன் கூறியதாவது: ஒரு வாரத்திற்கும் மேல் போராட்டம் தொடர்வதால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. துணைவேந்தரும், தமிழக அரசும் பாராமுகமாக இருப்பது கண்டனத்துக்குரியது. இது பல்கலை வளர்ச்சியை பாதிக்கும். நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி 2022 ஏப்ரலில் 136 தற்காலிக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் தற்போது 20க்கும் மேற்பட்டோரை துணைவேந்தர் நியமித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த நியமனம் குறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்றார்.