சென்னைக்கு மாற்றாக மதுரைக்கு தேவை நவீன கருத்தரிப்பு தொழில்நுட்பம்
மதுரை: சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றாக மதுரை அரசு மருத்துவமனை செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையத்தில் நவீன கருத்தரிப்பு தொழில்நுட்பத்தை (ஐ.வி.எப்.,) கொண்டு வரவேண்டும்.மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் மாதந்தோறும் 800 பிரசவங்கள் நடக்கின்றன. இதில் 75 முதல் 80 சதவீதம் சுகப்பிரசவம்தான். இதைத்தாண்டி குழந்தைப்பேறு இல்லாத பெண்களின் சதவீதமும் அதிகரித்து வருகிறது.இதற்காக சென்னை மற்றும் அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையம் 8 மாதங்களுக்கு முன் தனி வார்டாக உருவாக்கப்பட்டது.மதுரையில் உள்ள இம்மையத்தில் கர்ப்பப்பை வளர்ச்சியின்மை, கருமுட்டை வெளியேறாதது, கருமுட்டை தாமதமாவது, கருக்குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகளால் கருத்தரிக்க இயலாத, கருத்தரிக்க தாமதமாகும் பெண்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்.25 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 15 முதல் 20 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களில் 25 சதவீதம் பேருக்கு கணவரின் விந்தணுவை பெண்ணுக்கு செலுத்தி கருத்தரிக்க வைக்கும் ஐ.யு.ஐ., சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதிலும் 3 அல்லது 4 முறைக்கு மேல் தோல்வியடைந்தால் ஐ.வி.எப்., எனப்படும் நவீன தொழில்நுட்ப சிகிச்சைக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.தனியார் மருத்துவமனைகளில் இச்சிகிச்சைக்கு ரூ.பல லட்சம் செலவாகும். இங்கு ஐ.வி.எப்., தொழில்நுட்பம் இல்லாததால் ஏழைப்பெண்கள் குழந்தைப்பேறு கனவு நிறைவேறாத நிலையில் வேதனையுடன் திரும்புகின்றனர்.சென்னை அரசு மருத்துவமனையில் ஐ.வி.எப்., சிகிச்சை முறை உள்ளது. மதுரையில் ஏற்கனவே தனி வார்டாக உள்ள இம்மையத்தில் போதுமான இடவசதியும் உள்ளது.விரைவில் ஐ.வி.எப்., தொழில்நுட்பம் மதுரையில் துவக்கப்படும் என சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். நவீன மருத்துவத்தின் வாசலாக இருக்கும் மதுரை அரசு மருத்துமவனையில் ஐ.வி.எப்., சிகிச்சைக்கான கருவிகளையும், அதற்கான பணியாளர்களையும் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.