புதுக்கோட்டை: ''உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி
தொடரும்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன்
தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:நில
அபகரிப்பு மற்றும் மோசடியில் ஈடுபட்டோர் மீது, தமிழக அரசு நடவடிக்கை
எடுத்து வருகிறது. இதுவரை, 1,130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நில
அபகரிப்பு மற்றும் மோசடி வழக்குகளை விரைந்து முடிக்க, தனி கோர்ட் அமைக்கும்
நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழகம் முழுவதும், 48 லட்சம் குடும்பங்கள்,
சொந்த நிலமின்றி, அரசு புறம்போக்கு நிலங்கள், சாலையோரங்கள், நீர்நிலை
பகுதிகளில் குடியிருப்புகள் அமைத்து குடியிருந்து வருகின்றன.இவர்களுக்கு
வீட்டுமனை பட்டா வழங்கவும், அதில் வீடுகள் கட்டிக் கொடுக்கவும், அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக
மீனவர்கள், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை கடற்படையினரின்
தாக்குதலுக்கு உள்ளாகி, உயிரையும், உடைமைகளையும் இழந்து
வருகின்றனர்.இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்பதன் மூலம்
மட்டுமே, இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும். இதற்கான நடவடிக்கைகளை,
மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.உள்ளாட்சித் தேர்தலிலும்,
அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி தொடரும். தேர்தலுக்குப் பின், உள்ளாட்சி
அமைப்புகளில், வளர்ச்சிப் பணிகளுக்காக செலவிடும் முழு அதிகாரத்தையும்,
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமே வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.