உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓய்வுநாளில் ஊழியர்களுக்கு பி.எப்., பணிக்கொடை தரவேண்டாமா?

ஓய்வுநாளில் ஊழியர்களுக்கு பி.எப்., பணிக்கொடை தரவேண்டாமா?

மதுரை:மதுரை மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெறும் நாளில் ஊழியர்களுக்கு பி.எப்., பணிக்கொடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் பி.எப்., மற்றும் கிராஜூவிட்டி பணம் வழங்குவது வழக்கம். இப்பணம் பணிக்காலத்திற்குப் பின் குடும்பத்தினரின் திருமணம், கல்வி, கடன் பிரச்னைகளை சமாளிக்க பெரிதும் உதவும். மின்வாரியம், வங்கிகளில் ஓய்வு பெறும்போது ஊழியர்கள் கைநிறைய பணத்துடன் வீட்டுக்கு செல்வர். ஆனால் மதுரை போக்குவரத்து ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை. மதுரை மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் நேற்று 34 பேர் ஓய்வு பெற்றனர். இவர்களுடன் 4 பேர் தன்விருப்ப ஓய்வு மற்றும் சில நாட்களுக்கு முன் இறந்தோர் 2 பேர் என 40 பேருக்கு பி.எப்., மற்றும் கிராஜூவிட்டி பணம் 'செட்டில்' செய்ய வேண்டும். இதற்கான தொகை ரூ. 68.3 லட்சம். மதுரை நகர், வடக்கு, தெற்கு மற்றும் எல்லீஸ்நகர் உட்பட பல டெப்போக்களில் பணியாற்றியவர்கள் நேற்று மாலை உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்குரிய பி.எப்., கிராஜூவிட்டி பணம் வழங்கப்படவில்லை. ஊழியர்களில் பலர் பணிக்காலத்தில் திருமணம், வீடுகட்டுதல் என பி.எப்., கடன் பெற்றுள்ளனர். 1998க்கு பிறகு ஓய்வு பெறுவோருக்கு நிர்வாக தரப்பில் பி.எப்., பணம் செலுத்துவதில்லை. எனவே ரூ. ஒரு லட்சத்திற்கும் குறைவான தொகையுடனே வீடுகளுக்கு திரும்புவர். இந்தத் தொகையைகூட வழங்க முடியாத அளவு நிர்வாகத்தில் நிதிப்பிரச்னை உள்ளது. நேற்று ஓய்வு பெற்றோர் இன்னும் எட்டு மாதங்களுக்குப் பின்பே இந்தத் தொகையை பெற இயலும் என கூறப்படுகிறது. நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு நிதி வழங்க மாதம் ரூ. 30 லட்சம் அளவிற்கு தொகையை ஒதுக்கீட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இருந்தும் இம்மாதம் வழங்கப்படவில்லை. அவரிடம் கேட்டபோது, ''ஒவ்வொரு மாதமும் 30 முதல் 40 பேர் ஓய்வு பெறுகின்றனர். 2 ஆண்டுகளாக கிடைக்காதவர்களுக்கும் கடந்த டிசம்பர் வரை வழங்கியுள்ளோம். மீதியுள்ளோருக்கும் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை