உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தடுப்பணைகளால் நீர் ஆதாரங்களுக்கு பலனில்லை வைகை சீரழிவால் திட்டங்கள் வீண்

தடுப்பணைகளால் நீர் ஆதாரங்களுக்கு பலனில்லை வைகை சீரழிவால் திட்டங்கள் வீண்

மதுரை:வைகை ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் முறையான பராமரிப்பு இன்மையால், குடிநீர் ஆதாரம் அதிகரிக்க அமைக்கப்பட்ட தடுப்பணைகளால் பலன் கிடைக்கவில்லை. மதுரை மாநகராட்சியின் ஒரு நாள் குடிநீர் தேவை 155 மில்லியன் லிட்டர். மத்திய பொதுசுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சூழல் பொறியியல் குழும வரம்பின் படி, நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். 1996ல் தொடங்கிய முதல் வைகை திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 83 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்தது. வைகையிலிருந்து மாநகராட்சி ஒதுக்கீட்டிற்காக 600 மில்லியன் கனஅடி நீர் ஆற்றுப்படுகை மூலம் வழங்கி, மேலக்கால், கோச்சடை, மணலூர் குடிநீர் ஆதாரக்கிணறுகள் மூலம் குடிநீராக பெற திட்டமிடப்பட்டது. ஆற்றுப்படுகையில் வரும் வழியில் உறிஞ்சப்பட்டதால், எதிர்பார்த்த நீர் கிடைக்கவில்லை. இதை தடுக்கும் விதமாக, 2007 பிப்., 22ல் 4.77 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று தடுப்பணைகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. வினாடிக்கு 80 ஆயிரம் க.அ., நீர் செல்லும் வகையில், 240 மீ., நீளத்தில் அணை அமைக்கப்பட்டது. இதற்காக தடுப்புச்சுவர், பக்கச்சுவர், தளங்கள் அமைக்கும் பணி 9.15 கோடி ரூபாய் செலவில், பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது. ஆற்றை மையமாக வைத்து இத்திட்டங்கள் நிறைவேற்றிய நிலையில், வைகை பராமரிப்பில் அக்கறை செலுத்தப்படவில்லை. மணல் கொள்ளை தடுக்கப்படவில்லை. இதனால், தடுப்பணைகள் கட்டியதன் நோக்கம் நிறைவேறவில்லை. கடந்த காலங்களில், கோச்சடை, மேலக்கால், மணலூர் கிணற்றின் நீர் ஆதாரம் கடும் பாதிப்பை சந்தித்தது. இரண்டாம் வைகை திட்டம் செயல்படுத்தப்பட்டதால், ஓரளவு குடிநீர் சேவை தீர்ந்தது. மாநகராட்சியின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, வைகை ஆற்றை சீரமைக்கவும், தடுப்பணைகளை பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ