| ADDED : செப் 06, 2011 01:39 AM
மதுரை : மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழ்புலிகள் மாநில தலைவர் திருவள்ளுவன் தாக்கல் செய்த பொது நலவழக்கு:மதுரையில் சிறையில் கைதிகள் விசாரணை, தண்டனை என இருபிரிவுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கழிப்பறைகளை கைதிகள் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. விசாரணை கைதிகளுக்கு காலை 6 முதல் மாலை 6 மணி வரை மின்வினியோகம் செய்யப்படுவது இல்லை. சிறையில் உள்ள மருத்துவமனையில் விசாரணை கைதிகளுக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறை கழிப்பறைகளை கைதிகள் மூலம் சுத்தப்படுத்த தடை விதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நீதிபதிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, முதன்மை செசன்ஸ் நீதிபதி பாஸ்கரன் சிறையில் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தாரர்கள் சார்பில் வக்கீல்கள் அழகுமணி, மலைக்கனி ஆஜராகினர். நீதிபதி அறிக்கையை படித்த நீதிபதிகள், மனுதாரர் தெரிவித்த குறைகள் சிறையில் இருப்பது குறித்து நீதிபதி சுட்டிக்காட்டி இருப்பதாக குறிப்பிட்டனர். நீதிபதியின் அறிக்கை நகலை மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வக்கீல்களுக்கு வழங்க, பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின், நீதிபதி அறிக்கை குறித்து விரிவான விளக்கம் அளிக்கும்படி, உள்துறை செயலாளர், ஏ.டி.ஜி.பி., (சிறை) ஆகியோருக்கு உத்தரவிட்டனர். விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.