மதுரை : மதுரையில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள 10 இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சி மாற்றத்திற்கு பின், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டனர். இவர்களுக்கு பதில் பலர் பொறுப்பேற்றனர். அதேசமயம், குறிப்பிட்ட இடத்திற்கு இடமாற்றப்பட்ட சில இன்ஸ்பெக்டர்கள், பணியில் சேராமல் மாற்று இடம் கேட்டு அலைகின்றனர். இதில் சிலர் நினைத்த இடங்களில் பணிபுரிந்தும் வருகின்றனர். புறநகரில் காலியாக உள்ள ஒத்தக்கடை, பேரையூர், அலங்காநல்லூர் பணியிடங்களை பிற ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர். நகரில் தெப்பக்குளம் உட்பட 3 குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படுகிறது. உதாரணமாக, சமீபத்தில் தெப்பக்குளம் ஸ்டேஷனிற்குட்பட்ட நவரத்னபுரத்தில் துர்காதேவி, மகன் ஸ்ரீராம் ஆகியோர் நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
போலீசார் கூறியதாவது : பிற ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் கூடுதல் பொறுப்பாக கவனிப்பதால், வழக்குகளில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒருவழக்கை விசாரிக்கும், அந்த இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் குற்றச்சம்பவம் நடந்தால், அந்த வழக்கை விசாரிப்பதில்தான் அவர் ஆர்வமாக இருப்பார். இதுபோன்ற காரணங்களால் வழக்குகள் கிடப்பில் போடப்படுகின்றன. இதேபோல், நகர் தீண்டாமை ஒழிப்பு பிரிவு, மதுவிலக்கு பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு பணியிடங்களும் காலியாக உள்ளன. இதை நிரப்ப கமிஷனர் கண்ணப்பனும், மாவட்ட எஸ்.பி., ஆஸ்ரா கர்க்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.